Last Updated : 03 Dec, 2020 03:14 AM

 

Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

ஆசையை உண்டாக்கும் ரதி

மன்மதனின் மனைவி ரதிதேவி சிற்பம் இது. ரதி என்ற சொல்லுக்கு ஆசையை உண்டாக்குபவள் என்று பொருள். இவளுடைய வாகனம் அன்னப்பறவை. இடது கரத்தில் உள்ள கரும்புவில்லின் நாண் மலர்களால் ஆனது. மலர்க் கணையைப் பிரயோகம் செய்த நிலையில் வலது கரம் அமைந்துள்ளது. மலர்க்கணை யார்மீது பட்டது என்று தேடும் பாவனையில் ரதியின் முகமும் கண்களும் காணப்படுகின்றன. வளைந்த கரும்பு வில்லும், மலர்களாலான நாணும் தனித்துவமாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. தலை முதல் பாதம்வரை அணிமணிகளும் சிறப்பாக உள்ளன. தோளில் உள்ள ஆடை காற்றில் அசைவதுபோல் பிரமையை ஏற்படுத்துகிறது.

அன்னத்தின் மீது ஒயிலாக இடுப்பைச் சற்று வளைத்து அமர்ந்த நிலையில் இடது காலைச் சற்று மடக்கி வைத்து, வலது காலைத் தொங்கவிட்டபடி உள்ள நிலை சிற்பியின் அபாரமான கற்பனைத்திறனை எடுத்துக்காட்டுகிறது. அன்னப்பறவையின் முகமும் கண்களும் சிரிக்கும் பாவனையில் உள்ளன. இந்தச் சிற்பமானது திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் உள்ளது. இந்த ரதி - மன்மதன் சிலைகளுக்கு மஞ்சள் பூசி, மாலை அணிவித்து வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று நம்புகின்றனர்.

இந்த ஆலயம் கிருஷ்ண தேவராயரின் இளைய சகோதரர் அச்சுத தேவராயரால் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கும் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலை கோவிலிலும் ஒரேமாதிரியாக இருக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கிருஷ்ணாபுரத்திலும் இடதுகரத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்திருக்கிறார்கள். சுசீந்திரத்திலும் தென்காசியிலும் வலக்கரத்தில் பூச்செண்டும், இடக்கரத்தில் அன்னப்பறவையின் மூக்கணைங்கயிற்றைப் பிடித்தபடி உள்ளனர்.

மேலும் வேலூர் கல்யாண மண்டபத்தூண் ஒன்றில் சிறிய அளவில் கிளி மீது அமர்ந்துகொண்டு வலக்கரத்தில் கரும்பு வில்லும், இடக்கரத்தில் மலர்க்கணையும் வைத்தபடி காட்சி தருகிறார் ரதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x