Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM
இயேசு பேசிக்கொண்டிருந்த போது ஒரு நபர் குறுக்கிட்டு, “போதகரே, என் சகோதரனிடம் பேசி, எங்கள் பெற்றோரின் சொத்தை எனக்கும் பங்கிட்டுத் தருமாறு செய்யும்” என்று வேண்டினார். இதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறிய இயேசு, “எவ்வகைப் பேராசைக்கும் இடம் கொடாதபடி எச்சரிக்கையாய் இருங்கள்” என்று சொல்லிவிட்டு இந்தக் கதையைச் சொன்னார்.
ஒரு செல்வந்தனின் நிலம் மிக நல்ல விளைச்சலைத் தந்தது. விளைந்ததை எல்லாம் சேர்த்து வைக்க இடம் போதவில்லை என்பதால், அவனது களஞ்சியங்களை இடித்து, இன்னும் பெரிதாகக் கட்டத் தீர்மானித்தான். அதன் பிறகு என்ன கவலை?
“பல்லாண்டுகளுக்கு வேண்டிய தானியங்களும் பொருள்களும் களஞ்சி யங்களில் உள்ளன. எனவே, எனக்கு நானே என்ன சொல்லிக்கொள்வேன்? ‘ஓய்வெடு. உண்டு, குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு’” என்றான்.
உடனே கடவுள், “அறிவிலியே, இன்றிரவே நீ இறந்துவிடுவாய். அப்போது நீ சேர்த்து வைத்தவை எல்லாம் யாருடையவை ஆகும்?” என்று கேட்டார், எனச் சொல்லி இயேசு கதையை நிறைவுசெய்தார். இக்கதையை ‘பணக்கார முட்டாள்’ கதை அல்லது ‘அறிவற்ற செல்வன்’ கதை என்று அழைக்கின்றனர்.
பணக்கார முட்டாள்
மனித வாழ்வு நிலையற்றது என்பதைப் புரிந்துகொள்ளாமல், நல்ல விளைச்சலும் நிறைய பணமும் இருந்து விட்டால் கவலையே இல்லை. உண்டு, குடித்து, உறங்கிக் களித்திருக்கலாம் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதைத்தான் இக்கதையின் மூலம் இயேசு கற்பிக்க விரும்பினார்.
தன்னைத் தவிர வேறு எவரையும் பார்க்காத, தன்னைத் தவிர வேறு யாரைப் பற்றியும் நினைக்காதவர்களாக மனிதர் களைச் சொத்தும் பணமும் ஆக்கிவிடலாம்.
களஞ்சியங்களை இடித்துப் பெரிதாய்க் கட்ட வேண்டியிருக்கும் அளவுக்கான அமோகமான விளைச்சல், கடவுளின் அருள் இல்லாவிட்டால் சாத்தியமா என்று இச்செல்வந்தன் யோசிக்கவேயில்லை. வானம் பொழிந்தால் தானே வயல் விளையும்? வானத்தைப் பொழிய வைத்தது யார் என்றெல்லாம் அவன் கேட்கவில்லை. சக மனிதரையும் கருதவில்லை
இந்தச் செல்வந்தன் கடவுளை மட்டுமல்ல, சக மனிதரையும் பொருட்டாகக் கருதவே யில்லை. தனியொருவனாய் இவன் இருந்திருந்தால், இத்தனை நல்ல விளைச்சலைக் கண்டிருக்க முடியுமா? இவனது வயலில் அல்லும் பகலும் உழைத்த பணியாளர்களையும் இவன் முற்றிலும் மறந்துவிட்டான். அவர்களைப் பற்றி நினைத்திருந்தால், விளைந்ததில் அவர்களுக்குப் பங்கு தந்திருப்பான். ஊரில் உணவின்றித் தவித்த ஏழை எளியோருக்கு வாரி வழங்கியிருப்பான்.
இறைவனையும் சக மனிதர்களையும் பார்க்க விடாமல், நினைக்க விடாமல் அக விழிகளைக் குருடாக்கிவிடும் ஆற்றல் சொத்துக்கும் பணத்துக்கும் உண்டு என்பதால்தான் இயேசு எந்தப் பேராசைக்கும் இடம்தந்து மோசம் போய் விடாதீர்கள் என்று எச்சரித்தார்.
விஜயநகர பேரரசை மிகச் சிறப்பாக ஆண்டவர் பேரரசர் கிருஷ்ணதேவராயர். அவருக்கிருந்த செல்வாக்கையும் புகழையும் கண்ட டெல்லி பாதுஷா, அவரைச் சிறைப்பிடிக்க என்னென்னமோ செய்து பார்த்தார்.
வேறு வந்த வழியிலும் வெல்ல முடியாத நபரை வெல்வதற்குள்ள ஒரே வழி அவரது பலவீனம் என்ன என்று கண்டுபிடிப்பதுதான். எதன் மேல் அந்த நபருக்கு அளவுக்கு மீறிய ஆசை இருக்கிறதென்று பார்த்தால் போதும். அதுவே அவரின் பலவீனமாக இருக்கும்.
ஆசையினால் பட்ட அவதி
ராயருக்கு குதிரைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அழகான, கம்பீரமான குதிரையைப் பார்த்துவிட்டால் என்ன விலையாக இருந்தாலும் அதைக் கொடுத்து வாங்கிவிடுவார். இதைத் தெரிந்துகொண்ட பாதுஷா, தன்னுடைய குதிரைப் படையிலிருந்து ஆயிரம் அழகான, இளங்குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, ஆயிரம் வீரர்களையும் தேர்ந்தெடுத்து, அரபு நாட்டிலிருந்து வருகிற குதிரை வணிகர்கள்போல் அவர்களை மாறுவேடம் இடவைத்து அனுப்பிவைத்தார்.
ஆயிரம் அழகான குதிரைகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன என்று பெரிதும் மகிழ்ந்த ராயர், குதிரைகள் இருந்த இடத்துக்குச் சென்றார். குதிரை வணிகனைப் போல் நடித்த வீரர்களின் தலைவன், அவருக்குப் பிடித்த குதிரையில் சவாரி செய்து பார்த்துவிட்டு, அதன்பிறகு வாங்கினால் போதும் என்றான். “எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் குதிரையை ஓட்டிப் பார்க்கலாம். நாங்கள் உங்கள் பின்னே வருவோம். உங்களுக்குத் திருப்தி ஏற்பட்டால், அதன்பிறகு மற்றவை பற்றிப் பேசலாம்” என்றான்.
தனக்குப் பிடித்த ஒரு குதிரையில் ராயர் ஏறி அமர, குதிரை மிக வேகமாக ஓடத் தொடங்கியது. வணிகர்களைப் போன்று வேடமிட்டிருந்த வீரர்கள் அவர் பின்னே சென்றார்கள். குதிரை ஓட ஓட, ராயர் மகிழ்ச்சியில் தன்னை மறந்து போய்க்கொண்டே இருந்தார். வெகுதூரம் வந்த பிறகு ஓரிடத்தில் குதிரையை நிறுத்தினார். அவருக்குப் பின்னால் வந்த டெல்லி பாதுஷாவின் வீரர்கள் அவரைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். “அரசே, நாங்கள் டெல்லி பாதுஷாவின் வீரர்கள். உங்களைக் கைதுசெய்து டெல்லிக்குக் கொண்டு போகிறோம்” என்று சொன்ன பிறகே, தான் மோசம் போனதை உணர்ந்தார் கிருஷ்ணதேவராயர். இது ஓர் செவிவழித் தகவல்.
“மகிழ்ச்சிக்கும் பணத்துக்கும் தொடர் பில்லை என்பதற்கு மிகப் பெரிய ஆதாரம் எங்கள் குடும்பம்தான்” என்று சொன்ன பெண்மணி கிறிஸ்டினா ஒனாசிஸ். உலகின் மிகப்பெரும் செல்வந்தர்களில் ஒருவரான அரிஸ்டாட்டில் ஒனாசிஸ் இவரது தந்தை. கோடிக்கணக்கில் பணமும், பல கப்பல்களும், பல நாடுகளில் பல வீடுகளும், நூற்றுக்கணக்கான பணியாளர்களும் இருந்தாலும் கிறிஸ்டினாவின் வாழ்க்கையில் நிம்மதியில்லை. மனத்தளர்வை சமாளிக்க முடியாமல் போதை மருந்துகளுக்கு அடிமையாகி 38 வயதிலேயே இறந்தார் கிறிஸ்டினா ஒனாசிஸ். அவர் இறந்தபோது அவரது சொத்தின் மதிப்பு 250 மில்லியன் அமெரிக்க டாலர்.
என்ன இருந்தாலும், எவ்வளவு சேர்த்தாலும் என்ன பயன்?
(தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT