Last Updated : 17 Nov, 2020 03:13 AM

 

Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

சமூக ஊடகத்தில் அதிகம் புழங்குபவரா நீங்கள்?

காலையில் படுக்கையில் கண் விழித்தது முதல் இரவில் கண் அயரும்வரை சமூக ஊடகங்களே கதி என்று கிடப்பவரா நீங்கள்? இதற்கு, ‘ஆமாம்’ என நீங்கள் பதில் அளித்தால், உஷாராகிக்கொள்ளுங்கள். மணிக்கணக்கில் சமூக ஊடங்களில் புழங்கும் பழக்கம், மனச்சோர்வுக்கு இட்டுச் செல்வதாக ஆய்வுகள் அலாரம் அடிக்கத் தொடங்கிவிட்டன.

நண்பர்கள் உள்பட யாரோடும் தொடர்புகொள்ளும் எல்லையில்லா சுதந்திரத்தைச் சமூக ஊடகங்கள் கொடுத்திருக்கின்றன. உலக இணைய பயன்பாடு 60 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், அது சார்ந்த பயன்பாடுகளும் மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதில் முதலிடத்தில் இருப்பவை சமூக ஊடகங்கள். கையில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எல்லோருமே சமூக ஊடங்களில் புழக்கத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக, இளைஞர்கள் சமூக ஊடகங்களே கதியெனக் கிடக்கிறார்கள்.

மனச்சோர்வு வரலாம்

உலகை உள்ளங்கையில் கொண்டுவந்துவிட்ட இணையப் பயன்பாடும், அபரிமிதமான சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் தனிநபர்களிடம் தனிமை உணர்வை அதிகரித்துவருவதாக ஏற்கெனவே பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. ‘சைபர் புல்லியிங்’ எனப்படும் இணைய பகடிவதையும் இணையவாசிகளை பாடாய்படுத்திவருவதாகக் கூறப்படும் நிலையில், அதிகபடியான சமூக ஊடகப் புழக்கம், தூக்கமின்மையை உருவாக்கி மனச்சோர்வுக்கு ஆட்படுத்தலாம் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. ‘அசோசியேஷன் ஆஃப் ஸ்கிரீன் டைம் அண்ட் டிப்ரெஷன் இன் அடல்ஸ்’ என்கிற ஆய்வு, சமூக ஊடங்களை அதிகமாகக் கையாள்வோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புட்டுப்புட்டு வைத்துள்ளது.

அதாவது, சமூக ஊடகங்களில் அதிகமான பழக்கம், கொஞ்சம் கொஞ்சமாக மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் பழக்கங்களை தனிநபரிடம் உருவாக்கிவிடும் என்று எச்சரிக்கிறது இந்த ஆய்வு. பொதுவாக சமூக ஊடகங்களில் புழங்கும்போது நேரம், காலம் எதைப் பற்றியும் இளைஞர்கள் கவலைப்படுவதில்லை. உலகையே மறந்துவிடுகிறார்கள். அருகில் எது நடந்தாலும், அவர்களை அது எட்டுவதில்லை. சமூக ஊடகங்களில் ஈடுபட்டிருக்கும்போது தங்களுடைய பொறுப்புகளையும் மறந்துவிடுகிறார்கள். ஏற்கெனவே இரவில் தாமதமாகத் தூங்கச் செல்வோர், அதன்பிறகு நீண்ட நேரம் சமூக ஊடகங்களில் அரட்டையில் ஈடுபடுகிறார்கள். இதனால், இரவு 2 மணியைத் தாண்டி தூங்கச் செல்வோர், தூக்கமின்மைக்கு ஆட்படும் போக்கும் அதிகரித்துவருகிறது.

ஒளிப்படங்கள் உஷார்

இளைஞர்கள், மாணவர்கள் சமூக ஊடகங்களில் அதிகம் செலவுசெய்யும் ஒவ்வொரு மணி நேரத்திலும் மனச்சோர்வு அறிகுறிகள் கணிசமாக அதிகரிப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அவர்களிடம் தனிமை, சோகம், நம்பிக்கையின்மை உள்ளிட்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் எதிர்மறையான தாக்கங்கள் மட்டுமே இப்படி மன ஆரோக்கியத்தைப் பாதிப்பதாக ஆய்வு சொல்கிறது.

குறிப்பாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் அடிக்கடி தங்களுடைய லைப் ஸ்டைல் ஒளிப்படங்களைப் பகிர்வதால், அதைப் பார்ப்போர் தங்களைவிட மற்றவர்கள் சிறந்த வாழ்க்கையை வாழ்வதாகத் தாழ்வுமனப்பான்மையை அவர்களுக்குள் உண்டாக்குவதாகவும் கூறுகிறது ஆய்வு. ஒருவருடைய அழகு, அவருடைய உடை, அணியும் ஆபரணங்கள் போன்றவை தோற்றம் சார்ந்த எதிரான எண்ணத்தை ஏற்படுத்தி, மனச்சோர்வில் கொண்டுபோய்விடுகிறது. இது ஆழ்மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்போது பதற்றத்தைத் தூண்டி நிம்மதியைக் கெடுப்பதாகவும் எச்சரிக்கிறது ஆய்வு. ஒளிப்படங்களைப் அதிகளவில் பகிர உதவும் ஃபேஸ்புக், ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களின் தொடர்ச்சியான பயன்பாடுகளே இதற்குக் காரணம்.

முயற்சி, பயிற்சி

இதைத் தடுக்க வழியே இல்லையா என விழிக்க வேண்டாம். இணையத்தில் புழங்குவதைக் குறைத்துகொள்வது, தவிர்க்கவே முடியாமல் சமூக ஊடங்களில் நேரத்தைச் செலவிடும்போது, நேரத்தைக் கண்காணிக்க உதவும் செயலிகளைப் பயன்படுத்துவது, வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவது; நாள்தோறும் குறிப்பிட்ட நேரம் மொபைலைத் தொடாமல் கட்டுப்படுத்திக்கொள்ள பயிற்சி மேற்கொள்ளுதல்; நண்பர்கள், உறவினர்களை நேரடியாகச் சந்தித்து உரையாடுவது எனப் பழக்கப்படுத்திக்கொண்டால், இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுத்துகொள்ள முடியும்.

முயன்றால் முடியாதது எதுவுமில்லை. வெளி உலகைப் பார்க்க நீங்க ரெடியா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x