Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM
சின்னமனூர் அருகே மார்க்கயன்கோட்டை, பூலாநந்தபுரம், அய்யம்பட்டி, புலிக்குத்தி, சிந்தலைச்சேரி, டி.சிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி, எல்லப்பட்டி, அம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. மாணவ, மாணவியர் உயர்கல்விக்காக சின்னமனூர் வழியே வீரபாண்டி பகுதிக்கு வந்து அங்குள்ள சட்டக்கல்லூரி, ஐடிஐ, கலைக்கல்லூரிகளில் பயிலும் நிலை உள்ளது. மேலும் விளைபொருட்களையும், இடுபொருட்களையும் இந்த வழித்தடத்திலேயே கொண்டு சென்று வந்தனர்.
பூலாநந்தபுரத்தில் இருந்து குச்சனூர் 1.5 கி.மீ. தூரத்தில்தான் இருந்தும் முல்லைப் பெரியாறு குறுக்கிட்டதால் மழை மற்றும் நீர்வரத்து அதிகம் உள்ள நேரங்களில் இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் சின்னமனூர் வழியே 8 கி.மீ. சுற்றிச் செல்லும் நிலையே இருந்தது.
இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு நபார்டு மூலம் ஊர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரூ.632.50 லட்சம் மதிப்பீட்டில் 9.95 மீட்டர் அகலத்தில் இப்பாலம் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. குச்சனூர் பிரசித்தி பெற்ற ஆன்மிகத்தலம் என்பதால் இந்த பாலத்தினால் குறைவான தூரத்தில் பக்தர்கள் வந்து செல்ல வழி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு சின்னமனூர் அல்லது உப்புக்கோட்டை வழியே குச்சனூருக்கு சுற்றிச் செல்வதை விட பூலாநந்தபுரம் வழியே 1.5 கி.மீ. தூரத்தில் குச்சனூர் செல்ல முடியும்.
இது குறித்து நபார்டு துணைப் பொது மேலாளர் புவனேஸ்வரி கூறுகையில், கடந்த ஆண்டு ரூ.5,423 கோடி நிதி ஒதுக்கீடு வரப்பெற்று வேளாண்மை பள்ளிக்கல்வித்துறை மூலம் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், வேளாண்மை விற்பனைக்கூடம் மூலம் கிடடங்கி உள்ளிட்ட கிராமப்புற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
பூலாநந்தபுரத்தில் இருந்து குச்சனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதை வசதி இல்லாததால் மாணவர்களும், பொதுமக்களும் ஆற்றில் இறங்கிச் சென்று வந்தனர். தற்போது பாலம் கட்டப்பட்டதால் சுற்றுலா, கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல தரப்பினரும் எளிதில் பிரதான சாலையை அடையும் வகையில் வசதி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT