Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM

திண்டுக்கல்லில் தினமும் கூடும் சாலையோர வேலைவாய்ப்பு சந்தை : அன்றாட பணிக்கு காத்திருக்கும் கட்டிட தொழிலாளர்கள்

திண்டுக்கல் திருச்சி சாலையில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் தொழிலாளர்கள். உள்படம்: தொழிலாளி காளியப்பன்.

திண்டுக்கல்

திண்டுக்கல் நகரில் தினமும் காலையில் சாலையோரம் காத்திருந்து தங்களுக்கான வேலையை தேடிச்சென்று செய்து வருகின்றனர் கிராமப்புறங்களில் இருந்து வரும் கட்டிட தொழிலாளர்கள். இந்த சாலையோர வேலைவாய்ப்பு சந்தை தினமும் காலையில் திண்டுக்கல்லில் இரண்டு இடங்களில் பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் நகரை சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்கு பெருமளவில் கட்டிடத் தொழிலை தங்கள் வாழ்வாதார மாக கொண்டுள்ளனர். விவசாய பணிகள் பெரும்பாலும் பொய்த்துவிட்ட நிலையில், கிராமங்களில் விவசாயப் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நகர்புறங்களில் தேடத் தொடங்கினர்.

திண்டுக்கல் நகர், புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் கட்டுமானப் பணிகளால், கட்டிட பணிக்கு தொழிலா ளர்கள் தேவையும் அதிகம் உள்ளது. இதனால் பலர் விவசாய பணி பொய்த்துவிட்ட நிலையில் கட்டிட தொழிலாளர்களாக மாறி தங்கள் வருமானத்தை ஈட்டுகின்றனர்.

காட்டாஸ்பத்திரி

திண்டுக்கல் நகரில் திருச்சி சாலையில் காட்டாஸ்பத்திரி எதிரே தினமும் காலை 8 மணி முதல் பல்வேறு கிராமங்களில் வரும் தொழிலாளர்கள் காத்திருக்க தொடங்குகின்றனர். கட்டிட பணிகளை மேற்கொள்பவர்கள் இங்கு வந்து தங்களுக்கு தேவையான கொத்தனார், மண்வெட்டி ஆள், சித்து ஆள் என தேவைக்கேற்ப ஆட்களை பணிக்கு அழைத்துச் செல்கின்றனர்.

தினமும் நூற்றுக்கணக்கானோர் தங்களை வேலைக்கு அழைக்க வருவார்கள் என கையில் வீட்டில் இருந்து கொண்டுவந்த மதிய உணவுடன் இப்பகுதியில் காத்திருக்கின்றனர். இதில் பலருக்கு வேலை தினமும் கிடைக்கிறது. காலை 8 மணிக்கு வந்து காலை 10 மணி வரை காத்திருந்து வேலைக்கு யாரும் அழைக்காத நிலையில் வெறுங்கையோடு வீடுகளுக்கு திரும்பும் தொழிலாளர்களும் உள்ளனர்.

நாகல்நகர்

இதேபோல் திண்டுக்கல் நகரில் நாகல்நகர் பகுதியிலும் ஒரு சாலையோர வேலைவாய்ப்பு சந்தை உள்ளது. நத்தம் சாலை பகுதி கிராமங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் நாகல்நகர் பேருந்துநிலையம் அருகே தினமும் காலையில் வந்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

தினமும் வேலைக்கு காத்திருக்கும் தொட்டனம்பட்டியை சேர்ந்த தொழிலாளி காளியப்பன் கூறுகையில், திண்டுக்கல் அருகேயுள்ள தொட்டனம்பட்டி கிராமத்தில் இருந்து காலையில் மதிய உணவையும் எடுத்துக்கொண்டு திண்டுக்கல் வந்துவிடுவேன். காட்டாஸ்பத்திரி எதிரே என்னைப் போன்ற தொழிலாளர்கள் கூடி நிற்பர். திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டிட வேலைகளுக்கு ஆட்கள் தேவை அதிகம் இருக்கிறது. கட்டிடப் பணி எடுத்துச் செய்பவர்கள் சிலர் நிரந்தர தொழிலாளர்களை அவர்களே வைத்துக்கொள்வர். பலர் அன்றைய தினம் தேவைக்கேற்ப கூலியாட்களை வேலைக்கு அழைத்துக் கொள்வர். வேலைக்கு அழைத்தால் சென்று செய்கிறோம்.

நம்பிக்கை

சித்தாளுக்கு ரூ.400, மண்வெட்டி யாளுக்கு ரூ.600, கொத்தனாருக்கு ரூ.750 வரை கூலி கொடுக்கின்றனர். காலை 8 மணி முதல் இரண்டு மணி நேரம் காத்திருந்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டிற்கு செல்வது என்பது வேதனையான நிகழ்வுதான். வேலை கிடைக்கும் என தினமும் நம்பிக்கையுடன்தான் இங்கு கூடுகிறோம். திருச்சி சாலை காட்டாஸ்பத்திரி எதிரே, நத்தம் சாலை நாகல்நகர் பகுதிக்கு சென்றால் தேவையான வேலையாட்களை அழைத்து வரலாம் என கட்டிட பணியில் உள்ள அனைவருக்கும் தெரியும். எனவே எங்களை தேடி தினமும் பலர் வந்து வேலைக்கு அழைத்துச் செல்வர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் வேலை கிடைக்கும்.

கிராமப்புறங்களில் இருந்து இங்கு வந்து காத்திருக்கும் அனைவருக்கும் தினமும் வேலை கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. சில நாட்களில் வேலை இல்லாமல் வெறுங்கையோடு திரும்பிச் செல்லும் நாட்களும் இருக்கும். இங்கு காத்திருக்கும் 90 சதவீதம் பேருக்கு தினமும் வேலை கிடைக்கத்தான் செய்கிறது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x