Published : 28 Mar 2021 03:18 AM
Last Updated : 28 Mar 2021 03:18 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் 1060 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளன.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.விஜயலட்சுமி கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழனி தொகுதியில் 405, ஒட்டன்சத்திரம் தொகுதியில் 352, ஆத்தூர் தொகுதியில் 407, நிலக்கோட்டை தொகுதியில் 342, நத்தம் தொகுதியில் 402, திண்டுக்கல் தொகுதியில் 397 மற்றும் வேடசந்தூர் தொகுதியில் 368 என மொத்தம் 2673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
திண்டுக்கல், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர் ஆகிய ஐந்து தொகுதிகளில் 15க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்களின் பெயர் மட்டுமே இடம்பெற முடியும் என்பதால் ஐந்து தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரம் அமைக்கவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஐந்து தொகுதிகளில் கூடுதலாக 2305 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கூடுதலாக இருந்த 1060 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், இந்தியதேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று திண்டுக்கல் மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதனை செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், பெல் நிறுவன பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனை பணி முடிவடைந்த பின் 2305 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் பணிக்கு பயன்படுத்துவதற்காக அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT