Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM

விழுப்புரம் மாவட்ட தொகுதிகள்... :

திண்டிவனம் தொகுதியில் உள்ள மரக்காணம் கடற்கரைப் பகுதி.

திண்டிவனம் (தனி)

1951ம் ஆண்டு திண்டிவனம் தொகுதி உருவானது. திண்டிவனம் நகராட்சி, மரக்காணம் பேரூராட்சி, மரக்காணம் ஒன்றியத்தில் 65 ஊராட்சிகள், ஓலக்கூர் ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள் இத்தொகுதியில் அடங்கியிருக்கின்றன. மயிலம் ஒன்றியத்தில் 2 ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு, இத்தொகுதியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

பொது தொகுதியாக இருந்த இத்தொகுதி கடந்த 2011 ம் ஆண்டு முதல் தனித்தொகுதியாக மாற்றம் பெற்றுள்ளது.

தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய நகரங்களில் ஒன்று திண்டிவனம். விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவு தனியார் பள்ளிகள் இங்கு இயங்கி வருகின்றன. தமிழகத்தின் முதல் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சொந்த ஊரான ஓமந்தூர் இத்தொகுதியில் உள்ளது. தமிழக அரசு அவருக்கு நினைவு மண்டபமும் அமைத்துள்ளது.

மக்களின் எதிர்பார்ப்பு

திண்டிவனம் நகரில் புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்பது நீண்ட ஆண்டுகளாக இருந்து வரும் நிறைவேறாத கோரிக்கை.

வெண்மணியாத்தூரில் சிப்காட் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தி இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவேண்டும்.

மீனவர்களுக்கு எக்கியார்குப்பம், அழகன் குப்பம், கைப்பாணிக்குப்பம், வசவன் குப்பத்தில் தூண்டில் வலை அமைக்க வேண்டும்.

மரக்காணம் பகுதியில் மீன் பதப்படுத்தும் கிடங்கு, உற்பத்தி செய்யப்படும் உப்பை சேமித்து வைக்க கிடங்கு அமைக்க வேண்டும்.

வேலை கிடைக்காததால் சென்னை, திருப்பூர், பெங்களூரு என வெளியூர் சென்று இத்தொகுதியைச் சேர்ந்த பல இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். வேலை வாய்ப்பை உருவாக்க சென்னைக்கு அடுத்தபடியாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திண்டிவனத்தில் புதிய தொழிற்கூடங்களை உருவாக்க வேண்டும். இதுவெல்லாம் இத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள்.

வெற்றி வரலாறு

1951-ம் முதல் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் வரை இத்தொகுதியில் தலா 5 முறை திமுகவும், அதிமுகவும், காங்கிரஸும், 2 முறை சுயேச்சையும் வென்றுள்ளது. கடந்த முறை திமுக வென்றது.

வாக்காளர்கள்

ஆண் வாக்காளர்கள் - 1,13,322

பெண் வாக்காளர்கள் - 1,16,577

திருநங்கைகள் - 13

மொத்த வாக்காளர்கள் - 2,29,912

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x