Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டதில் அதிமுக, திமுக, அமமுக, மநீம கூட்டணிக்கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டன.
திண்டுக்கல் சட்டசபை தொகுதிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் பரிசீலனை திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் காசிசெல்வி முன்னிலையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாண்டி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயசுந்தர், அதிமுக, அமமுக கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகள் வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்றனர்.
திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் பாண்டி, அமமுக சார்பில் போட்டியிடும் ராமுத்தேவர், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ஜெயசுந்தர், மநீம சார்பில் போட்டியிடும் ராதாகிருஷ்ணன் ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
திண்டுக்கல் தொகுதியில் 30 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில் முறையான ஆவணங்கள் இன்றி தாக்கல் செய்யப்பட்ட ஏழு பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
நத்தம் தொகுதியில் 27 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று பரிசீலனை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம், அதிமுக வேட்பாளர் நத்தம் ஆர்.விசுவநாதன், அமமுக வேட்பாளர் ராஜா, நாம்தமிழர் கட்சி சிவசங்கரன் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எட்டு பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நேற்று தேர்தல் அலுவலர் ஆனந்தி முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது. இதில் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர், மநீம உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மொத்தம் 29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வேட்புமனு பரிசீலனையின்போது தேர்தல் பார்வையாளர் பூபேந்திரசிங் பார்வையிட்டார். வேடசந்தூர் தொகுதியில் 9 வேட்புமனுக்களும், நிலக்கோட்டையில் 5 வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. ஆத்தூர் தொகுதியில் 5, ஒட்டன்சத்திரம் தொகுதியில் 4 வேட்புமனுக்கள் என மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் மொத்தம் 38 வேட்புமனுக்கள் நிராகரிக் கப்பட்டன.
தேனி மாவட்டம்
தேனி மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் 152 பேர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று பரிசீலனையில் 66 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 86 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. போடி தொகுதியில் அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நேற்று வேட்பாளர் மனு மீதான பரிசீலனை நடந்தது. பெரியகுளத்தைப் பொறுத்தளவில் 31ஆண்கள், 9 பெண்கள் உள்ளிட்ட 40 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் சமத்துவமக்கள் கட்சி வேட்பாளர் பாண்டியராஜன் மனுதள்ளுபடி ஆனது. இவர் மக்கள் நீதி மய்யம் சார்பில் தாக்கல் செய்திருந்த மனு ஏற்கப்பட்டது. பகுஜன்சமாஜ் ஆறுமுகம், புதிய தமிழகம் முருகன் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 17 பேரின் மனுக்கள் தள்ளுபடி ஆன நிலையில் 23 மனுக்கள் ஏற்கப்பட்டன.
கம்பத்தில் தொகுதியில் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேல் தலைமையில் வேட்புமனு பரிசீலனை நடந்தது. இதில் மாற்று வேட்பாளர்கள், சுயேட்சைகள் உள்ளிட்ட 10 பேரின் மனுக்கள் தள்ளுபடி ஆன நிலையில் 16 மனுக்கள் ஏற்கப்பட்டன.
ஆண்டிபட்டியில் மொத்தம் 35 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்பிரமணியன் தலைமையில் வேட்புமனு பரிசீலனை நடந்தது. இதில் திமுக.அதிமுக,அமமுக,நாம்தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 22 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. இந்துமக்கள் கட்சி, சுயேட்சைகள் உள்ளிட்ட 13பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. போடி தொகுதியில் மொத்தம் 51 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. நேற்று மனு பரிசீலனை தேர்தல் கண்காணிப்பாளர் மனிஷ்பாண்டியா தலைமையில் நடந்தது. இதில் மாறுவேட்பாளர்கள், சுயேட்சைகள் உள்ளிட்ட 26 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 25 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதன்படி மாவட்டத்தின் 4 தொகுதிகளில் 86 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. போடி தொகுதியில் அதிகபட்சமாக 25 வேட்பாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர். நாளை மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள கடைசி நாளாகும். அதன்பிறகே போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT