Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM

பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் - பங்குனி உத்திர திருவிழா தொடக்கம் :

பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெரியகுளம்

பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் உச்ச நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

பெரியகுளம் தென்கரை வராகநதிக் கரையில் அமைந்துள்ளது பாலசுப்பிரமணியசுவாமி கோயில். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழா வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமி, ராஜேந்திர சோழீஸ்வரர் மற்றும் அறம்வளர்த்தநாயகி அம்ம னுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. சிவ வாத்தியங்கள் முழங்கப்பட்டன.

கொடியேற்ற நிகழ்ச்சியில் செயல் அலுவலர் அண்ணாதுரை, திருப்பணிக்குழுத் தலைவர் சசிதரன், உறுப்பினர்கள் சிதம்பரசூரியவேலு, நாகராஜன், பாண்டியராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இத்திருவிழா வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் உபயதாரர்களின் மண்டகப்படியும், தினமும் இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக வரும் 27-ம் தேதி காலை 10.30 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், அன்று மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது. 28-ம் தேதி தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x