Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் 3 தொகுதிகளில் போட்டியிடுவதுடன், ஒரு தொகுதியை தங்களது கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிவிட்டன. இதில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதும் 2 தொகுதிகளில் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, வேட்புமனு பரிசீலனையும் நேற்று நடந்து முடிந்தது. வேட்புமனு திரும்பப் பெறுதல் வரும் 22-ம் தேதியும், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படவுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, பரமக்குடி(தனி), ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் முதுகுளத்தூர், பரமக்குடி தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதுகின்றன.ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சியான பாஜகவுடன், திமுக மோதுகிறது.
திருவாடானை தொகுதியில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரசுடன் மோதுகிறது. இதில் அதிமுகவும், திமுகவும் மோதும் முதுகுளத்தூர், பரமக்குடி தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் கீர்த்திகா முனியசாமி, திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனை எதிர்த்து போட்டியிடுகிறார்.
ராஜ கண்ணப்பன் சட்டப்பேரவை, மக்களவை என பல தேர்தல்களில் போட்டியிட்டவர். அதனால் அவருக்கு தேர்தல் களம் நன்கு தெரியும். அதேசமயம் அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி, இத்தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் மலேசியா பாண்டியனைவிட குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். அவருக்கும், அவரது கணவரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான முனியசாமிக்கும் இத்தொகுதி பரிட்சயமானது. அதனால் 2 கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்திலும், தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். வெற்றி யாருக்கு என்பதை இத்தொகுதி மக்கள் விரைவில் தீர்மானிப்பர்.
அதேபோல் பரமக்குடி(தனி) தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏவான என்.சதன்பிரபாகரும், திமுக சார்பில் புதுமுகமானவரும், செங்கல்சூளை அதிபருமான எஸ்.முருகேசன் போட்டியிடுகின்றனர்.
முருகேசன் முதன் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்கியுள்ளார். பரமக்குடி தொகுதியில் இருவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அனைத்து தரப்பு மக்களின் வாக்குகளை பெறுவதற்கு முயற்சித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாடானை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்எம்.கருமாணிக்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் இளைஞர்.
அதிமுகவின் கே.சி.ஆணிமுத்து 2006-ல் கரு.மாணிக்கத்தின் தந்தை கே.ஆர்.ராமசாமியை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர். அதிமுகவின் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர். மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தல்களில் போட்டியிட்டு வென்றவர். அதனால் அவருக்கு தேர்தல் வியூகங்கள் நன்கு தெரியும் என்கின்றனர் அதிமுகவினர். அதனால் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT