Published : 14 Mar 2021 03:16 AM
Last Updated : 14 Mar 2021 03:16 AM
இந்திய ஏலக்காய்களின் 70சதவீதம் கேரள-தமிழக எல்லையான இடுக்கி மாவட்டத்தில் விளைகிறது. சுமார் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இங்கு ஏல விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதி தண்ணீர் அதிகம் தேங்காத சரிவுப்பகுதியாக அமைந்துள்ளதால் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது. மேலும் ஈரக்காற்றும், குறைவான வெப்பமும் கொண்ட பருவநிலை உள்ளதால் தரமான ஏலக்காய் இங்கு விளைகின்றன. ஏலச்செடிகள் பொதுவாக பருவகாலங்களில் 20 முதல் 25 டிகிரி வெப்பநிலையையும், குளிர்காலத்தில் 12 முதல் 15 டிகிரி வெப்பநிலை வரையும் தாங்கக் கூடியது. வெப்பத்தில் செடி கருகாமல் இருக்க முறையாக பராமரிக்க வேண்டும். இதற்காக ஏலத்தோட்டங்களுக்கு இடையே பலா உள்ளிட்ட மரங்களை வளர்ப்பர். இதன் நிழல் மூலம் அதிக வெயிலில் இருந்து ஏலச்செடிகள் காப்பாற்றப்படும்.
தற்போது இடுக்கி மாவட்டத்தில் கடும் வெயில் நிலவி வருகிறது. கோடைக்கு முன்பே துவங்கிய இந்த வெப்பத்தினால் ஏலச்செடிகள் கருகி வருகின்றன. கோடைமழையின் போது பெய்யும் மழை இதன் வளர்ச்சிக்கு உகந்தது. ஆனால் தற்போது மழை இல்லாததால் அதிக வெப்பநிலையை எதிர் கொள்ள முடியாமல் இலைகள் கருகத் தொடங்கி உள்ளன.
எனவே விவசாயிகள் கிணறுகளில் இருந்து பிளாஸ்டிக் பைப் மூலம் செடிகளின் மேலே தெளித்து அதன் வெப்பத்தை தணித்து வருகின்றனர்.
இது குறித்து ஏல விவசாயி செந்தில்குமார் கூறுகையில், இந்த பருவத்தில் தரைப்பகுதியை விட இங்குள்ள மலைப்பகுதியில் வெப்பம் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கடும் வெயிலாக உள்ளது. கடந்த ஆண்டு வீசிய காற்று, அதிக மழையினால் தோட்டங்களில் நிழலுக்காக வளர்த்திருந்த மரங்கள் வெகுவாய் சாய்ந்து விட்டன.
இதனால் நேரடியாக வெப்பம் பட்டு மண்ணில் வறட்சி ஏற்பட்டு இலைகள் கருகி வருகின்றன. செடிகளின் வெப்பத்தை குறைக்க அதன் மேல் நீரை தெளித்து வருகிறோம். இருப்பினும் கருகுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT