Published : 14 Mar 2021 03:16 AM
Last Updated : 14 Mar 2021 03:16 AM
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே நீர்நிலைகள் பராமரிப்புக்கு கூலி இல்லாமல் செய்யும் ‘ஆளமஞ்சி எனும் கட்டாய வேலை’ என்ற நடைமுறையை தலைமுறை தலைமுறையாக தொடர வலியுறுத்தும் கல்வெட்டு கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நாகணி ஆசிரியர் அர்ச்சுனன், வாடி நன்னியூர் ரத்தினம் ஆகியோர் கொடுத்த தகவல் அடிப்படையில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு தேவகோட்டை வட்டம் வாடி நன்னியூர் கண்மாய் அருகே இருந்த கல்வெட்டை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து வே. ராஜகுரு கூறிய தாவது:
இந்தக் கல்வெட்டு 2 அடி உயரம், ஒரு அடி அகலம் உள்ள கருங்கல்லில் வெட்டப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் அரிவாள் தீட்ட பயன்படுத்தியுள்ளனர். இதனால் மன்னர் பெயர் இருந்த முதல் வரி அழிந்துவிட்டது. தற்போது 13 வரிகள் மட்டுமே உள்ளன.
‘‘பிறவரி, ஆளமஞ்சி ஆகியவை தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக நடைபெற வேண்டும். இதற்கு யாராவது தீங்கு செய்தால் அவர்கள் கங்கை மற்றும் சேதுக்கரையில் காராம் பசுவையும், பெற்றோரையும் கொன்ற தோசத்திலே போகக் கடவதாக’’ என கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
இதில் நிலத்துக்கு விதிக்கப்படும் புரவரியை, பிறவரி எனச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. நீர்நிலைகள் பராமரிப்புக்கு கூலி இல்லாமல் செய்யும் கட்டாய வேலை ஆளமஞ்சி எனப்படுகிறது. இந்த இரண்டும் சந்திரன், சூரியன் உள்ளவரை தொடர்ந்து நடைபெற வேண்டும் என சந்திரப் பிரவேசமாகக் கட்டளையிடப்பட்டுள்ளது. தலைமுறை தலைமுறையாக என்ற பொருளில் சந்ததிப் பிரவேசம் என்பதை சந்திரப் பிரவேசம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கல்வெட்டின் எழுத்தமைதியை பார்க்கும்போது கி.பி. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனலாம். கல்வெட்டில் மன்னர் பெயர் இல்லை என்றாலும், இது சேதுபதி மன்னர்கள் (அ) அவர்களின் அரசப் பிரதிநிதிகளின் கல்வெட்டு எனக் கருதலாம். தற்போது இவ்வூர் வாடி நன்னியூர் என அழைக்கப்பட்டாலும் கல்வெட்டில் நன்னியூர் வாடி எனக் குறிப்பிடப்படுகிறது.
முல்லை நிலத்து ஊர் என்ற பொருளில் ‘பாடி’ என அழைக்கப்பட்டு, பிறகு அது ‘வாடி’ எனத் திரிந்துள்ளது. வாடி என்பதற்கு சாவடி என்ற பொருளில் காவல் அலுவலகமாகவும் இவ்வூர் விளங்கியிருக்கலாம். நன்னியூர் என்பதற்கு சிறிய ஊர் என்று பொருள்.
இவ்வூரில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த எட்டுக்கைகள் கொண்ட காளி சிற்பம் சிறிய கோயில் உள்ளது. கோயில் முன் உடைந்த திருமால் சிற்பமும் உள்ளது. இங்குள்ள கண்மாய் பகுதியில் இடைக்காலத்தைச் சேர்ந்த சிவப்பு வண்ண பானை காணப்படுகிறது. இதன்மூலம் இவ்வூரில் கி.பி.13-ம் நூற்றாண்டில் இருந்தே மக்கள் வசித்து வந்துள்ளதை அறியமுடிகிறது, என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT