Published : 14 Mar 2021 03:16 AM
Last Updated : 14 Mar 2021 03:16 AM
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக சமூக ஆர்வலர் ச.மீ.ராசகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக மக்கள் மன்றத் தலைவராக இருக்கும் இவர், ஏற்கனவே காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் வார்டு வாரியாக குழுக்கள் அமைத்து அப் பகுதிகளில் உள்ள குறைகளை உடனுக்குடன் சரி செய்து வருகிறார்.
காரைக்குடியைத் தனி மாவட்டமாகவும், மாநகராட்சியாகவும் அறிவிக்க வலியுறுத்தி பல போராட்டங்களை முன் னெடுத்தவர்.
இவரது மக்கள் மன்றம் மூலம் இலவச ஆம்புலன்ஸ், இறந்தவர் கள் உடலை வைக்க இலவச குளிர்சாதனப் பெட்டி போன்ற உதவிகளை செய்து வருகிறார். பல ஆண்டுகளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாய், தந்தையற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழங்குவதோடு, அரசுப்பள்ளிகளையும் தத்தெடுத்து தனியார் பள்ளிகளைப் போல் மாற்றி வருகிறார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு இறுதிச் சடங்குகளை செய்துள்ளார்.
இவரது தமிழக மக்கள் மன்றம் மலேசியா, சிங்கப்பூர் புருணை, வளைகுடா நாடுகள், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் தொடங்கி அங்கு பரிதவிக்கும் தமிழரை தங்களின் செலவிலேயே தாயகத்துக்கு அழைத்து வரும் பணியினையும் பல ஆண்டுகளாக செய்து வருகிறார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் இந்த தேர்தலில் வேட்பாளர்களாக நிற்க, சமூகப்பணி செய்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து காரைக்குடியில் நிற்க ச.மீ.ராசகுமார் விருப்ப மனு கொடுத்திருந்தார். அவரது சமூக பணியை அறிந்த கமல், காரைக்குடியில் நிற்க வாய்ப்பு கொடுத்துள்ளார். 48 வயதான ராசகுமார் பி.காம் படித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT