Published : 07 Mar 2021 03:15 AM
Last Updated : 07 Mar 2021 03:15 AM

மார்ச் 8-ஐ ஏன் கொண்டாடுகிறோம்? :

உலகெங்கும் மார்ச்-8 அன்று சர்வதேச பெண்கள் தினம் கொண் டாடப்படுகிறது. கல்வியில், வேலை வாய்ப்பில், பொதுவெளிகளில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட பல்வேறு உரிமைகளைப் பெண்கள், இன்றைக்கு போராடிப் பெற்று வருகிறார்கள்.

சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடுவதற்குப் பின்னே, மிக நீண்ட பெண் எழுச்சிக்கான வரலாறு இருக்கிறது. கி.பி. 1789-ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் பெண்கள் போர்க் கொடி ஏந்தினர். இந்தச் சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமைகள் வேண்டும், உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும், 16 மணி நேர வேலையைக் குறைக்க வேண்டும், வாக்குரிமை வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பெண்கள் போராட்டத்தில்இறங்கினர். ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தப் போராட்டம் பரவியது.

பெண்கள் வாரிசுகளைப் பெற்றெ டுப்பற்காகவும், வீட்டு வேலைக் காகவும் மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்த காலமாக அன்றைய காலமிருந்தது. பிறகு, பெண்களின் மனதில் விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பித்தது. 1907-க்குப் பிறகு போராட்டம் தீவிரமானது. டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில், 1910-ம் ஆண்டு உலக சோஷலிச பெண்கள் மாநாடு ஒன்று நடைபெற்றது.

அந்த மாநாட்டில அனைத்து நாட்டிலுள்ள பெண்களும் சேர்ந்து மகளிர் தினம் என்ற ஒன்றை உருவாக்கி, அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றுவலியுறுத்தினார். அத்துடன் பெண்கள்சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எதிராகப் போராட வேண்டுமென்றும் குரல் கொடுத்தனர்.

பிறகு, ஐக்கிய நாடுகள் சபை, மார்ச் 8-ஐ உலக மகளிர் தினமாக அறிவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1977-ல் இது தொடர்பான தீர்மானமும் நிறைவேற் றப்பட்டது. உலகின் முதல் சோஷலிசப் புரட்சி ரஷ்யாவில் 1917-ம் ஆண்டு லெனின் தலைமையில் நடந்தது. அதற்கு முன்னோடியாக மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்களின் புரட்சி தொடங்கியது. இதில் ஆண் தொழிலாளர்களும் கலந்து கொண்டார்கள் என்றாலும் பெண்களே பிரதான பங்கு வகித்தனர். இந்தப் புரட்சிதான் ஜார் மன்னர் தனது அரியணையை விட்டிறங்கக் காரணமாக அமைந்தது. அதை நினைவுகூரும் விதமாக மார்ச் 8 தேர்ந்தெடுக்கப்பட்டது.

உலக அளவில், உழைக்கும் வயதில் உள்ள பெண்களில் பாதிப் பேர் மட்டுமே, வேலைக்குச் செல்கின்றனர் என்கிறது ஐ.நா. உழைப்புக்கான உடல் தகுதி, திறன், அறிவுக்கூர்மை இருந்தும் குடும்ப சூழல்களால் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இப்போது உழைக்கும் பெண்களில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சமுதாயத்தில் ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமைகள் கிடைக்க வேண்டுமென்பதற்கான போராட்டங்கள் இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

- மு.மு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x