Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM
ரூ.10,800 கோடி மதிப்பீட்டில்
என்எல்சியின் இருபெரும் மின் திட்டங்கள்
நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
ரூ10,800 கோடி மதிப்பீட்டில் என் எல்சி இந்தியா நிறுவனத்தின் இரு பெரும் மின் திட்டங்களை அண்மையில் தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.
என்எல்சி இந்தியா நிறுவனம் நெய்வேலியில் அமைத்துள்ள 1,000மெகாவாட் அனல்மின் நிலையத்தையும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அமைத்துள்ள 709 மெகா வாட் சூரியஒளி மின் நிலையங்களையும் கடந்த 25-ம் தேதி கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார்.
என்எல்சி இந்தியா நிறுவனம், தனது திட்டங்களில் ஒன்றாக நெய்வேலியில் ரூ.7,800 கோடி செலவில், அமைத்துள்ள மணிக்கு 10 லட்சம் யூனிட் (1,000 மெகாவாட்) மின்சக்தி உற்பத்தி செய்யும் புதிய அனல்மின் நிலையம், ஒவ்வொன்றும் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட இரு மின்உற்பத்தி பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது.
இதுபோன்று தமிழகத்தின் திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும்தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் மணிக்கு 7 லட்சத்து 9 ஆயிரம் யூனிட் (709 மெகாவாட்) உற்பத்தி செய்யும் திறன்கொண்ட சூரிய ஒளி மின்நிலையங்களை ரூ.3,000 கோடி மதிப்பில் அமைத்துள்ளது.
இவ்விரு திட்டங்களையும் நாட்டிற்கு அர்ப்பணித்து பேசிய பிரதமர்மோடி, நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மின்சக்தி எவ்வளவு இன்றியமையாதது என எடுத்துக் கூறியதுடன், இந்த இரு பெரும் மின்திட்டங்களையும் நாட்டிற்கு அர்ப்பணித்தது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
முன்னதாக இவ்விழாவில் உரையாற்றிய மத்திய நிலக்கரி, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கடந்த 3 ஆண்டுகளில் தனது சுரங்க உற்பத்தி அளவை இருமடங்காக அதிகரித்ததற்காகவும், கடந்த 6 ஆண்டுகளில் தனது மின்சக்தி உற்பத்தி அளவினை 65 சதவீதம் உயர்த்திய தற்காகவும் என்எல்சி இந்தியா நிறுவனத்தை பாராட்டினார்.
மேலும், 750 ஒப்பந்த தொழிலாளர்களை இவ்வாண்டு நிரந்தரப்படுத்தியதற்காகவும், 9 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்களும் 15 ஆயிரம் ஒப்பந்ததொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் இரண்டு ஊதிய உயர்வுஒப்பந்தங்களை நிறைவேற்றியதற் காகவும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரத்தில் ஒரு ஜிகா வாட்
புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறையில் பல புதிய திட்டங்களை அமைத்து வருவதற்காக, குறிப்பாக, இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒரு ஜிகா வாட் எனப்படும் மணிக்கு 10 லட்சம் யூனிட் சூரிய ஒளி மின்சக்தியை உற்பத்தி செய்யும் மின் நிலையங்களை அமைத்த முதல் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றதற்காகவும் என்எல்சி நிறுவனத்தைப் பாராட்டினார்.
இவ்விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள், என்எல்சி நிறுவன தலைவர் மற்றும் இயக்குநர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT