Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM
உத்தமபாளையம் அருகே அய்யம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. முறை கேட்டைத் தடுக்க வீரர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டை முறையாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடைபெற்றது. தலைமை வகித்து ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் பேசுகையில், ஜல்லிக்கட்டு குழுவினரிடம் பங்கேற்க உள்ள காளைகள், வீரர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பெற்ற வீரர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இதில் 600மாடுகள், 300மாடுபிடிவீரர்கள் பங்கேற்கலாம் என்றார்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. 75 நிமிடங்களுக்கு ஒருமுறை 50 மாடுபிடி வீரர்களைச் சுழற்சி முறையில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகளுக்கு எதிராக வீரர்கள் நிற்கக் கூடாது. களத்தில் இருந்தபடி மொபைல், வீடியோ மூலம் பதிவு செய்யக் கூடாது. காளைகள் வெளியேறும் வழியை தடுக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மாட்டின் திமிலைப் பற்றி அணைத்து 15 மீட்டர் தூரம் அல்லது 30 விநாடிகள் அல்லது காளையின் 3 துள்ளலுக்கான நேரம் மட்டுமே மாடுபிடிவீரர்கள் அனுமதிக்கப்படுவர். விதிமுறைகளை மீறும் வீரர்கள் காவல்துறை மூலம் அப்புறப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காயம் ஏற்படுவதைத் தவிர்க்க 15 மீட்டர் தூரத்திற்கு வாடிவாசல் அருகே தென்னை நார் பரப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து நிகழ்வையும் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பார்வையாளர் கேலரி உள்ளிட்ட பகுதியை ஆய்வு செய்து பொதுப்பணித்துறை உறுதிச்சான்று அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் 38 கிணறுகள் உள்ளன. பாதுகாப்பு நடவடிக்கையாக இதனைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டி ஏற்பாடுகளை அய்யம்பட்டி ஜல்லிக்கட்டுக் குழுத்தலைவர் அண்ணாதுரை உள்ளிட்ட பலரும் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT