Published : 29 Oct 2021 03:11 AM
Last Updated : 29 Oct 2021 03:11 AM
உடல்நலனையும் சுகாதாரத்தையும், பள்ளி மாணவர்கள் பேணிக் காக்க வேண்டியது அவசியம் என்று சென்னையில் நடந்த ‘சுத்தம், சுகாதாரம்’ இணையவழி சுகாதார விழிப்புணர்வு தொடர் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினார்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘சுத்தம் சுகாதாரம்’ இணையவழி சுகாதார விழிப்புணர்வு தொடர் நிகழ்ச்சியின் தொடக்க விழா சென்னை மேற்கு சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’, ‘கலெக்ட்டிவ் குட் ஃபவுண்டேஷன்’, ‘அவ்வை வில்லேஜ் வெல்ஃபர் சொஸைட்டி’ ஆகியவற்றுடன் இணைந்து தமிழக அரசின் நல்லாதரவுடன் நடத்தப்பட்ட இவ்விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, ‘சுத்தம் சுகாதாரம்’ தொடர் நிகழ்ச்சி திட்டம், ஹைஜீன் டிஸ்பென்சர், ஹைஜீன் நண்பன், ஹைஜீன் கார்னர் ஆகிய திட்டங்களைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
பள்ளி மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் பள்ளிக்கல்வித் துறை இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களின் உடல், உள்ள நலன் தொடர்பான நிகழ்ச்சிகளில் தொண்டு நிறுவனங்கள் உட்பட யார் ஈடுபட்டாலும் அந்நிகழ்ச்சிகளில் ஆர்வத்தோடு கலந்துகொள்வது எனது வழக்கம். இங்கே பேசிய ‘இந்து தமிழ்’ ஆசிரியர், பள்ளிகளுக்கு வெளியே வயது வித்தியாசம் பாராமல் விருப்பமுள்ளவர்கள் தாமாக முன்வந்து தமிழ் கற்கும் வகையில் தனிப்பட்ட வகுப்புகளை பள்ளிக்கல்வித் துறை நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தார்.
இதுபோன்றதொரு முயற்சியை ஒரு மாவட்டத்தில் மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளோம். அனைத்து தரப்பினரையும் தேடிச் சென்று தமிழ் கற்பிக்கும் முயற்சி ஒருபுறம் இருக்க, ஆர்வமுள்ளவர்கள் தாமாகத் தேடிவந்து தமிழ் கற்பதற்கான ஒரு திட்டம் குறித்தும் அரசு பரிசீலிக்கும்.
பள்ளி மாணவர்கள் சுகாதாரத்தையும் உடல்நலனையும் பேணிக் காக்க வேண்டியது அவசியம். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் நாம் நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும். எனவே, உடல்நலனை அனைவரும் பாதுகாக்க வேண்டும். கரோனா பெருந்தொற்று சூழல் நமக்கு மிகப்பெரிய படிப்பினையை கற்றுக் கொடுத்துள்ளது. கைகளை அடிக்கடி கழுவி தூய்மையாக வைத்துக் கொள்ளும் பழக்கம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே வெளிநாட்டினர்தான் உடல்நலன் மற்றும் சுகாதார விஷயங்களில் மிகவும் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால், கரோனாவுக்குப் பிறகு நாமும் உடல்நலன் மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளோம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு நவ. 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதேநாளில் ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டமும் சோதனை அடிப்படையில் 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதன்பிறகு இதர மாவட்டங்களுக்கும் அத்திட்டம் விரிவுபடுத்தப்படும். நீண்ட நாட்கள் கழித்து பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்கு வர இருக்கிறார்கள். அவர்கள் எப்படி கையில் பேனா பிடித்து எழுதப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த வகையில் அவர்களை கற்றல் சூழலுக்கு தயார்படுத்தும் வகையில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் 6 மாத காலத்துக்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்தப் பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்து கடந்த 8 நாட்களில் 80 ஆயிரம் தன்னார்வலர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். தினசரி 10 ஆயிரம் என்ற அளவில் பதிவு செல்கிறது. இன்னும் ஒரு லட்சம் தன்னார்வலர்கள் தேவை.
இந்தத் திட்டத்தில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு பிளஸ் 2 முடித்தவர்களும், அதேபோல், 5 முதல் 8-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு பட்டதாரிகளும் கற்றுக் கொடுக்கலாம். குழந்தைகளின் கற்றல் இடைவெளியைக் குறைக்க வேண்டியுள்ளது. தினமும் மாலை 5 மணி முதல்இரவு 7 மணி வரை சுமார் ஒரு மணி நேரம்அல்லது ஒன்றரை மணி நேரம் தெரிந்த பாடங்களை தன்னார்வலர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். இதற்காக தனியாக பயிற்சிக் கையேடும் அவர்களுக்கு அளிக்கப்படும். இந்தப் பணியில் தன்னார்வலர்களாக ஈடுபட முன்வருமாறு படித்த இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இந்தத் திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ திட்டம் குறித்து ரெக்கிட்ஸ் நிறுவனத்தின் டாக்டர் ஜியோத்ஸ்னா சிஸ்ட்லா அறிமுகவுரை ஆற்றிப் பேசும்போது, "எங்களின் இணையவழி சுகாதார கல்வித் திட்டம் இந்தியாவில் 20 மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 2 கோடி பள்ளிக் குழந்தைகளுக்கு இணையவழி வாயிலாக சுகாதாரக் கல்வியை கொண்டு சென்றுள்ளோம். குழந்தைகளுக்கு சுகாதாரக் கல்வி அளிக்கும் இந்த உன்னதமான திட்டத்தை தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து செயல்படுத்துவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு சுகாதாரம் மற்றும் உடல்நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படும். இது அவர்களின் ஆரோக்கியத்தை பேணிக் காக்க வழிவகுப்பதுடன் எதிர்காலத்தில் சுகாதாரத்திலும் உடல்நலத்திலும் அக்கறை கொள்வதற்கும் பேருதவியாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.
‘கலெக்ட்டிவ் குட் ஃபவுண்டேஷன்’ மூத்த ஆலோசகர் கே.வைத்தியநாதன் பேசும்போது, "தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கோவா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் எங்கள் அமைப்பினர் பணியாற்றி வருகிறார்கள். ‘சுகாதார நண்பன்’ என்ற குறும்படம் மூலம் சுகாதாரக் கல்வியை அனைத்து பள்ளி மாணவர்களிடமும் கொண்டு செல்வோம்" என்றார்.
‘சுத்தம் சுகாதாரம்’ செயல்படுத்தும் முறை குறித்து பேசிய ‘அவ்வை வில்லேஜ் வெல்பர் சொஸைட்டி’ செயலாளர் கிருஷ்ணகுமார், இணையவழி சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து பள்ளி மாணவ, மாணவியரையும் சென்றடைய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
‘ஆரோக்கியமாக வாழ…’ எனும் நோக்கில், கரோனா போன்ற பெருந்தொற்று பரவல் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு முறைகள், தனிநபர் சுத்தம், கழிப்பறை சுத்தம், சுத்தமான குடிநீர், சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும், இவற்றைக் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் அனைவரும் உணரும் வகையில் மாணவ, மாணவியருக்கு படக்காட்சிகளுடன் விளக்கப்பட்டன.
முன்னதாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின்ஆசிரியர் கே.அசோகன் வரவேற்றுப் பேசும்போது, “தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதுடன் பெரிய எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் பலன்கள் அடுத்த 3 ஆண்டுகளில் தெரியும். தமிழ் கற்க ஆர்வம் உள்ளவர்களுக்கும், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தமிழ் கற்றுக் கொடுக்கும் வகையில் மாணவர் மன்றம், புலவர் மன்றம் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி ‘இல்லம் தேடி தமிழ்’ என்ற திட்டத்தின் மூலம் பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்யலாம்" என்றார்.
விழாவில், ‘இந்து தமிழ் திசை’ பொதுமேலாளர் டி.ராஜ்குமார், வர்த்தக பிரிவுத் தலைவர் ஷங்கர் வி.சுப்ரமணியம், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அ.மார்ஸ், வட்டார கல்வி அலுவலர் முனியன், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியைபத்மஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார்.
‘சுத்தம், சுகாதாரம்’ இணையவழி சுகாதார தொடர் நிகழ்ச்சியானது பள்ளி மாணவ - மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் பார்த்து பயன்பெறும் வகையில் நவம்பர் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை இணையவழியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியை https://www.htamil.org/00091, https://www.htamil.org/00092 ஆகிய யூ-டியூப் லிங்க்-களில் காணலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT