Published : 16 Oct 2021 06:15 AM
Last Updated : 16 Oct 2021 06:15 AM
தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு பல் வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாநில அளவில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமை களைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங் குடியினர் நல ஆணையம் என்ற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, ஆணையத்தின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவகுமாரும், துணைத் தலைவ ராக தலித் முரசு என்ற இதழை நடத்தி வரும் புனிதப் பாண்டியனும், உறுப்பினர்களாக சமூகநீதி மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டிட பல்வேறு வழக்குகளை தொடுத்தவருமான வழக்கறிஞர் குமாரதேவன், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, அவர்களுக்கு இலவச சட்டஉதவி களை வழங்கி வருபவருமான வழக்கறிஞர் பொ.இளஞ்செழியன், திருநெல்வேலி, பொள்ளாச்சி மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் கல்வி மேம்பாட்டுக்கு பாடுபட்டு வருபவரான லீலாவதி தனராஜ், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் குறித்து எழுதி வரும் எழுத்தாளர் எழில் இளங்கோவன், திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் முனைவர் கே.ரகுபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT