Published : 14 Jan 2021 03:20 AM
Last Updated : 14 Jan 2021 03:20 AM

சின்னவேடம்பட்டி ஏரியில் பொங்கல் விழா

சரவணம்பட்டி

கோவை சின்னவேடம்பட்டி ஏரியில் 150-வது வது வார களப் பணியை முன்னிட்டு, பொங்கல் விழா நடைபெற்றது.

சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள் கடந்த 150 வாரங்களாக ஏரியில் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 150-வது வாரத்தையொட்டி ஏரிக் கரையில் பொங்கல் விழா நடைபெற்றது. பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து, ஏரியின் உயிர்வேலி அருகே அமைந்துள்ள குளத்து மாரியம்மன் கோயிலில் வழிபாடு செய்தனர்.

இதுகுறித்து சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பினர் கூறும்போது, "கோவை வடக்குப் பகுதியின் முக்கிய நீராதாரமான சின்னவேடம்பட்டி ஏரி 200 ஏக்கர் பரப்பு கொண்டது. இங்கு 8 கிலோமீட்டர் தொலைவுள்ள ராஜவாய்க்காலை சீரமைத்துள்ளோம்.

மேலும், தமிழகத்திலேயே முதல்முறையாக, ஏரியின் எல்லையில் பல்லுயிர்ப் பாதுகாப்புக்காக உயிர் வேலி அமைக்கும் பணி நடைபெறுகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கணுவாய், மாங்கரை, ஆனைகட்டியில் மழை நீர் ஓடைகள் ஆய்வு செய்யப்பட்டு, சீரமைப்புக்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

ஏரிப் பகுதியில் பலவகை நாட்டு மரங்கள், மூலிகைச் செடிகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. பறவைகளின் தாகம் தீர்க்க நீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, தேனீக்கள் இனப்பெருக்கத்துக்காக தேனீ வளர்ப்பு பெட்டிகள் வைக்கவும் திட்டமிட்டுள்ளோம். அவிநாசி-அத்திக்கடவு இரண்டாவது திட்டத்தில் சின்னவேடம்பட்டி ஏரியை சேர்க்க வேண்டுமென தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x