Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

தேவகோட்டை அருகே ஆற்று வெள்ளத்தால் 3 கிராமங்கள் துண்டிப்பு அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மக்கள் சிரமம்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆற்று வெள்ளத்தால் 3 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மக்கள் சிரமம் அடைந்தனர்.

தேவகோட்டை வட்டம், கீழ உச்சாணி கிராமத்தையும் துதியணி, சுண்டூரணி, ஆலன்வயல் ஆகிய கிராமங்களையும் இணைக்கும் சாலையின் குறுக்கே மணிமுத்தாறு செல்கிறது. இதற்காக ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கீழஉச்சாணி அருகேயுள்ள கண்மாயின் கழுங்கு உடைந்து மணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்று பாலத்தின் மேற்பகுதியிலும் தண்ணீர் செல்வதால் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

துதியணி, சுண்டூரி, ஆலன்வயல் ஆகிய 3 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ரேஷன்பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் கீழஉச்சாணிக்குத் தான் வர வேண்டும். மேலும் அவர்கள் கீழஉச்சாணி வழியாகத் தான் வெளியூர் செல்ல முடியும். இந்நிலையில் வெள்ளநீர் கீழஉச்சாணியில் உள்ள பள்ளியிலும் புகுந்துள்ளது.

வெள்ளம் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஊராட்சித் தலைவர் லதாசந்திரசேகர் தகவல் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கிராமமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x