Published : 14 Jan 2021 03:23 AM
Last Updated : 14 Jan 2021 03:23 AM
மாற்றுத்திறனாளி ஒருவர், தான் அரசு ஓய்வூதியர் என்பதை மறைத்து, அரசின் மாதாந்திர நிவாரணத் தொகை வழங்குமாறு, முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
`ஜவுளிக் கடையில் பணியாற்றி ஓய்வுபெற்ற தனக்கு, மாற்றுதிறனாளிக்கு அரசு வழங்கும் ரூ.1,500 உதவித்தொகையை வழங்க வேண்டும்’ என்று, அந்த நபர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக, தூத்துக்குடி பகுதி-1 கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா, நேரில் விசாரணை நடத்தினார். அப்போது, திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
மாத உதவித்தொகை கேட்டு மனு அளித்தவர், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும், அவரது மனைவி ஓய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் என்பதும் தெரியவந்தது.
அதிர்ந்துபோன கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா, மனுதாரரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரிடம் எதுவும் தெரியாததுபோல் விசாரணை நடத்தினார். அப்போதும் அவர் உண்மையை மறைத்து தவறான தகவல்கள் கூறியதால் ஆத்திரமடைந்த கிராம நிர்வாக அலுவலர், அவரது முழு பயோடேட்டாவையும் கூறி கடுமையாக எச்சரித்தார்.
கிராம நிர்வாக அதிகாரிக்கும், அந்த நபருக்கும் இடையே நடந்த இந்த தொலைபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தவறான தகவல்கள் அளித்து உதவித்தொகை பெற முயன்ற ஓய்வூதியதாரருக்கு கடுமையான கண்டனங்களும், தவறை தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அதிகாரி பிரேமலதாவுக்கு பாராட்டுகளும் குவிகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT