Published : 24 Nov 2021 03:09 AM
Last Updated : 24 Nov 2021 03:09 AM
திருவாரூர்: தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவாரூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் வீ.மா.பெரியசாமியின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாவட்டச் செயலாளர் ஆர்.ஈவேரா பேசினார்.
கூட்டத்தில், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலக பொறியாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பொறியாளர்களை கொண்டு ஆய்வு செய்து உறுதித் தன்மை சான்று வழங்க வேண்டும். பாதுகாப்பு குறைபாடு என கண்டறியும் பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் பள்ளி கட்டிடங்களில் பழுது ஏற்பட்டால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியத்தை முறைப்படுத்தி, காலம் தவறாமல் மாதந்தோறும் வழங்க வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை அரசே நேரடியாக செலுத்த வேண்டும் என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT