Published : 17 Nov 2021 03:08 AM
Last Updated : 17 Nov 2021 03:08 AM
மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கும் முயற் சியாக மாவட்டத்தில் 1,149 இடங்களில் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள், மழைநீர் உறிஞ்சு குழிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி நாவல்நகர், மண்மங்கலம் மேற்கூர், நெரூர் வடபாகம் முனியப்பனூர் ஆகிய பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் தனியார் விவசாய நிலங்களில் மழைநீரை சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தது:
மழை காலத்தில் பெய்யும் மழைநீரை வீணாக்காமல் சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, நீர்வளத்தை பெருக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள், மழைநீர் உறிஞ்சு குழிகள் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது.
சேதமடைந்த ஆழ்துளைக் கிணறுகள் உள்ள இடங்களில் மழைநீர் உறிஞ்சு குழிகள் அமைக்கப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் 1,149 பண்ணைக் குட்டைகள், மழைநீர் உறிஞ்சு குழிகள், தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, ஒன்றியம் வாரியாக, கரூர் 71, தாந்தோணி 64, அரவக்குறிச்சி 76, க.பரமத்தி 102, குளித்தலை 45, கிருஷ்ணராயபுரம் 155, கடவூர் 89, தோகைமலை 95 பண்ணைக்குட்டைகள்.
கரூர் 31, தாந்தோணி 22, அரவக்குறிச்சி 46, க.பரமத்தி 27, கிருஷ்ணராயபுரம் 18, குளித்தலை 29, கடவூர் 44 உறிஞ்சு குழிகள்.
தாந்தோணி 13, அரவக்குறிச்சியில் 20, குளித்தலை 10, கிருஷ்ணராயபுரம் 22, கடவூர் 136, தோகைமலை 34 தடுப்பணைகள் என மொத்தம் 1,149 பணிகள் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிகுமார், விஜயலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT