Published : 04 Nov 2021 03:13 AM
Last Updated : 04 Nov 2021 03:13 AM
மாநில அளவிலான வாள் சண்டை, நீச்சல் போட்டி மற்றும் வில் வித்தைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
தமிழ்நாடு வாள்சண்டை விளையாட்டு கழகம் சார்பில் அண்மையில் 20 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான வாள்சண்டை போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில், நாமக்கல் மாவட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் 30-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றனர்.
இதில், அரவிந்த வேலன், கவின், சாமிநாதன், ஜெயகீர்த்தனா, ஜெமிலியா, தேவதர்ஷினி ஆகியோர் அரியானாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்குபெறவுள்ளனர்.
இதுபோல, கடந்த மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற 21-வது மாநில அளவிலான நீச்சல் போட்டியில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அபிநந்த், அபூர்வா ஆகியோர் பங்கேற்று வெள்ளிப் பதக்கங்கலை வென்றனர்.
மேலும், கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற 14-வது மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் 8-9 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சாதனா முதலிடமும், 9 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மினி சப்-ஜுனியர், சப்-ஜுனியர், ஜுனியர், சீனியர் பிரிவில் நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 16 வீரர்கள் பங்கேற்று 21 பதக்கங்கள் வென்றனர்.
இப்போட்டிகளில் சப்-ஜுனியர் பிரிவில் வெற்றி பெற்ற கலையரசி, ஜானியா, நிதாஞ்சன் ஆகியோர் மகாராஷ்ட்ராவில் நடைபெறவுள்ள தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் (பொ) சி.சிவரஞ்சன், வாள் சண்டை பயிற்சியாளர் செ.பிரபுகுமார், கால்பந்து பயிற்சியாளர் சு.கோகிலா, கோ-கோ, கபடி பயிற்சியாளர் ச.புவனேஷ்வரி, நீச்சல் பயிற்சியாளர் வீ.ரகுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT