Published : 29 Oct 2021 03:13 AM
Last Updated : 29 Oct 2021 03:13 AM
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் மாநிலத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆய்வு மேற்கொண்டார் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழமை யான கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 90 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் கல்வியாண்டில் கூடுதலாக 200 மாணவர்களை சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது மீனவ மக்கள் அதிகம் கொண்ட பகுதியாகும்.
மரைன் இன்ஜினீயர், சிவில் டிரேட்ஸ்மேன், பிளம்பர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் புரோகிரமிஸ்ட் ஆகிய 4 பயிற்சி வகுப்புகள் புதிதாக தொடங்கப்படும். இப்பயிற்சி நிலையத்தில் படித்த தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வாயப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
தமிழ்நாடு சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவ ராவ், மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறும்போது, ‘‘17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் குடும்ப ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை என 75 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாமல் இருந்தது. உடனடியாக அதை சீர்செய்து ஒரே நாளில் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு முதல்வர் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது ’’ என்றார். மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT