Published : 29 Oct 2021 03:13 AM
Last Updated : 29 Oct 2021 03:13 AM
குழந்தை திருமணங்களை தடுக்க மக்கள் பிரதிநிதிகள் உதவ வேண்டும் என ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை திட்ட அலுவலர் பா.கந்தன் வலியுறுத்தி உள்ளார்.
தி.மலை மாவட்டம் துரிஞ்சாபுரம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி தி.மலையில் நடைபெற்றது.
துரிஞ்சாபுரம் ஒன்றியக் குழுத் தலைவர் ஏ.தமயந்தி தலைமை வகித்தார். துரிஞ்சாபுரம் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் நெ.சரண்யா வரவேற்றார். மாவட்ட திட்ட அலுவலர் பா.கந்தன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “கிராமங்களில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை கண்டறிந்து, சிகிச்சை அளிக்க மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரைக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் இணை உணவுகளை குழந்தைகள் உண்பதை உறுதி செய்து, அதன் முக்கியத்துவத்தை பெற்றோருக்கு எடுத்துரைக்க வேண்டும்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராம சுகாதார ஊட்டச்சத்து தினம் நடத்தி, குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மேம்பட வேண்டும். அங்கன்வாடி மையத் தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை செய்து கொடுக்க வேண்டும்.
சத்தான காய்கறிகள் எளிதாக கிடைக்க, ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க முன்வர வேண்டும். போஷன் பஞ்சாயத்து அமைக்க ஏற்படுத்த வேண்டும். கிராமங்களில் நடைபெறும் குழந்தை திருமணங்களை தடுக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து மக்கள் பிரதிநிதிகள் உதவிட வேண்டும்” என்றார்.
புத்தாக்க பயிற்சி அரங்கில், சிறுதானியங்கள் மற்றும் ஆரோக்கியமான தானியங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவு வகைகளின் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இதில், ஒன்றியகுழுத் துணைத் தலைவர் ச.உஷாராணி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், வட்டார திட்ட உதவியாளர் சிவசங்கரி நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT