Published : 29 Oct 2021 03:13 AM
Last Updated : 29 Oct 2021 03:13 AM
வேலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட குடியாத்தம் அரசு மருத்துவமனையில் போதிய இடம் இல்லாமல் நெருக்கடியான நிலை உள்ளது. இதற்கு, விரைவில் தீர்வு காண்பதுடன் அரசின் அறிவிப்பை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அரசு மருத்துவமனை சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது. மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்ட நிலையில் குடியாத்தம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. குடியாத்தம் அரசு மருத்துவமனை தற்போது 190 படுக்கை வசதிகளுடன் தினசரி 1,500 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இங்கு, 32 மருத்துவர்கள், 40 செவிலியர்கள், 20-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் என 120-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். ஏறக்குறைய 80-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், குடியாத்தம் நகர மக்கள் என மருத்துவமனை பரபரப்புடன் இயங்கி வருகிறது.
இந்நிலையில், மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள குடியாத்தம் அரசு மருத்துவமனை வளாகம் போதுமான இட வசதிகள் இல்லாமல் நெருக்கடியுடன் உள்ளது. புதிய அறிவிப்பால் வரக்கூடிய சலுகைகளை பயன்படுத்துவதில் தாமதம் ஏற்படலாம் என கூறப் படுகிறது.
இதுகுறித்து, குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேமலதா ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘அரசின் அறிவிப்பால் தற்போது கூடுதலாக 200 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கிடைக்கும். 60 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இடித்து அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டலாம். புதிய அறிவிப்பால் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள். சி.டி ஸ்கேன் வசதி, அறுவை சிகிச்சை அரங்குகள் கட்டப்படும். கூடுதல் இட வசதிக்காக அருகே உள்ள நகராட்சி இடத்தையும் கோரியுள்ளோம்’’ என்றார்.
அரசு மருத்துவமனையில் இடப் பற்றாக்குறை நெருக்கடி குறித்து ரோட்டரி மாவட்ட ஆளுநர் (தேர்வு) ஜே.கே.என்.பழனி கூறும்போது, ‘‘குடியாத்தம் அரசு மருத்துவமனை இடம் பற்றாக்குறை குறித்து ஏற்கெனவே கடந்த 2019-ல் ஆய்வு செய்யப்பட்டது. தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் உள்ள கட்டிடத்தை கூடுதலாக 2 தளங்கள் கட்ட ரூ.5 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, அது ரூ.7 கோடியாக உயர்ந்துள்ளது. பழைய கட்டிடத்தை இடித்தால் பிரம்மாண்ட கட்டிடம் கட்ட முடியும். இட நெருக்கடிக்கு ஓரளவுக்கு தீர்வு காண முடியும்.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்பை அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் அவரது தொகுதிக்கு எடுத்துச் சென்றுவிட்டார். தேவை அடிப்படையில் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்பை உடனடி யாக ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.
இது தொடர்பாக குடியாத்தம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அமலு விஜயன் கூறும்போது, ‘‘குடியாத்தம் அரசு மருத்துவமனையில் இட நெருக்கடி இருப்பதாக மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். தற்போது, மருத்துமனையை தரம் உயர்த்தி இருப்பதால் இடப்பற்றாக்குறை குறித்தும், நகராட்சி ஒதுக்கீடு செய்த இடத்தை மீண்டும் பெறுவது குறித்தும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT