Published : 27 Oct 2021 03:08 AM
Last Updated : 27 Oct 2021 03:08 AM
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் பாம்புகள் மற்றும் வன விலங்குகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் 0427- 2415097 என்ற வனத்துறையின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உதவிகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், மழையின்போது பாம்புகள், வன விலங்குகள் போன்றவை வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் வீடுகளில் புகுந்துவிடும் ஆபத்து உள்ளது. இதுபோன்ற அசாதாரண சூழல் ஏற்படும்போது, பொதுமக்கள் வனத்துறையின் உதவியைப் பெற வசதியாக சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் அவசர கால உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறியதாவது:
மழைக்காலங்களில் பாம்புகள் உள்ளிட்ட வன விலங்குகளால் ஆபத்து நேரிடும்போது, பொதுமக்கள் சேலம் மாவட்ட வனத்துறை அலுவலகத்தை 0427- 2415097 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம். இந்த எண்ணுக்கு வரும் அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு உடனடியாக வனத்துறையின் ரேடியோ அலைவரிசை மூலம் ஒலிபரப்பு செய்யப்படும்.
இதன் மூலம் உதவி கோரி அழைப்பு வந்த இடத்துக்கு அருகில் உள்ள வனத்துறையின் ரோந்து குழுவினர் உடனடியாக சென்று உதவுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT