Published : 02 Oct 2021 06:41 AM
Last Updated : 02 Oct 2021 06:41 AM

மதுரையை முடக்கும் போக்குவரத்து நெரிசல் - நிதி ஒதுக்கியும் அறிவிப்போடு நிற்கும் கனவு திட்டங்கள் : தூங்கா நகரின் துயரத்துக்கு முதல்வர் தீர்வு தருவாரா?

ரவீந்திரன்

மதுரையில் கடந்த கால் நூற்றாண்டில் மக்கள் நெருக்கமும், வாகனங்களின் எண் ணிக்கையும் பல மடங்கு பெருகிவிட்டன. தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங் கள் நகரச் சாலைகளைக் கடக்கின்றன. ஆனால் அதற்கேற்றவாறு, போக்குவரத்து கட்டமைப் புகளை மேம்படுத்தாததால் நெரிசலில் சிக்கி மக்கள் சிரமப்படுகின்றனர்.

2015-ம் ஆண்டு மதுரையின் முக்கியச் சந்திப்புகளான கோரிப்பாளையம், சிம்மக்கல் மற்றும் மேலமடை சந்திப்பு போன்ற இடங்களில் மேம்பாலங்கள் அமை க்கப்படும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மதுரை மக் களின் இந்த கனவுப் பாலங்களை அமைக்க, நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ரூ.184 கோடி ஒதுக்கி, 4 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் மதுரையின் துரதிருஷ்டம், இந்த பாலங்களில் ஒன்றுகூட இதுவரை கட்டப்படவில்லை.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நகரின் போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இத்திட்டத்தில் 85 சதவீத பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசலுக்கு எந்த வகையிலும் தீர்வு காணப்படவில்லை.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் மதுரை ஒத்தக்கடை பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘‘மதுரையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் மேம்பாலங்கள் அமைத்தால் நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினை ஏற்படும். இதனால் திட்டம் தாமதமாகி கமிஷன் எடுக்க முடியாது என்பதால், தேவையில்லாத இடங்களில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களை நிறைவேற்றுகின்றனர்,’’ என் றார். அவர் கூறியதுபோல், மதுரையில் உள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தொலை நோக்கு திட்டங்களில் சிறிய இடையூறு வந்தாலும் அதைத் தீர்க்க முயற்சி செய்யாமல் அப்படியே கிடப்பில் போட்டுவிடுகின்றனர்.

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் 25 ஆண்டுகளாகப் போக்குவரத்து நெரிசல் உள் ளது. ஆனால், இந்தச் சாலையில் 100 நூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் கட்டிய ஏவி மேம்பாலத்தை தவிர வேறு எந்தப் போக்குவரத்து வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை. இங்குதான் அரசு ராஜாஜி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ளன.

இந்நிலையில் தல்லாகுளம்-கோரிப்பாளை யம், சிம்மக்கல்-பெரியார் நிலையம் மேம் பாலங்கள் இதுவரை அமைக்கப்படவில்லை. அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் செல்லும் போது போக்குவரத்து போலீஸார், அவர்க ளுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் வழிகளை ஏற்படுத்திக் கொடுத்துவிடுவதால் அவர்களுக்கு பொது மக்களின் துயரங்கள் தெரிவதில்லை. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படாததால் சென்னை, கோவையை விட மதுரை மாநகரம் 10 ஆண்டுகள் பின் தங்கியிருக்கிறது.

மதுரை சுற்றுலாவை அடிப்படையாக கொண்ட நகரம் என்பதால் சுற்றுலாப் பயணி கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதில் செல்லக்கூடிய வகையில் சாலைகள் மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் மோசமான சாலை கட்டமைப்புகளால் மதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை பெருமளவு குறைந்துள்ளது. மதுரையில் 200 அடி அகலம் கொண்ட காளவாசல் பைபாஸ் சாலையைத் தவிர வேறு அகலமான சாலைகள் இல்லை.

ஆனால், அங்குகூட தெளிவான திட்டமிடலின்றி அமைக்கப்பட்ட மேம்பாலத்தால் காளவாசல் சந்திப்பில் வழக்கம்போல் நெரிசல் தொடர்கிறது. இதனால் மேம்பாலமும், அதற்கு ஒதுக்கிய நிதியும் வீணாகி உள்ளது.

அரசரடி வழியாக தேனி சாலை, திண்டுக்கல் சாலை செல்லும் வாகனங்களும், பழங்காநத்தம் பகுதியிலிருந்து அரசரடி நோக்கிச் செல்லும் வாகனங்கள், கோச்சடையில் இருந்து பெரியார் நிலையம் செல்லும் வாகனங்கள் மற்றும் ஆரப் பாளையத்தில் இருந்து தேனி வழியாகச் செல்லும் வாகனங்களும் காளவாசல் பாலத்துக்கு கீழே சிக்னலில் நீண்ட நேரம் காத்திருந்து செல்கின்றன.

எனவே இப்பிரச்சினைக்கு தீர்வாக காளவாசல் உயர்மட்ட மேம்பாலத்துக்கு மேலாக அரசரடி-பிபிசாவடி மார்க்கமாக பறக்கும் பாலம் அமைத்தால் மட்டுமே காளவாசல் சந்திப்பில் நெரிசலைக் குறைக்க முடியும்.

மேலும் மதுரையில் நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் பறக்கும் பாலம், பாண்டி கோவில் சந்திப்பு மேம்பாலம், வைகை ஆற்றில் குருவிக்காரன் சாலை, ஓபுளா படித்துறை ஆகிய இடங்களில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் மந்தகதியில் நடப்பதால் இப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பழங்காநத்தத்தில் கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலம் அரை குறையாக பயனற்று நிற்கிறது.

இன்று மதுரை வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவற்றின் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, மதுரையின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

‘ஸ்மார்ட் சிட்டி’ நிதி வீணடிப்பு

நெரிசலுக்கு பாலங்கள் மட்டுமே தீர்வு

மதுரை ‘ட்ராவல் கிளப்’ தலைவர் ரவீந்திரன் கூறியதாவது: மதுரை சதுர வடிவில் அமைந்துள்ள புராதன நகரம். இங்குள்ள மாசி வீதிகள், வெளி வீதிகள் மட்டுமில்லாது நகரின் எந்த ஒரு சாலையையும் அகலப்படுத்த முடியாது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு மேம்பாலங்கள் அமைப்பதுதான். வெறும் மாசி வீதிகள், வெளி வீதிகளில் மட்டுமே மேம்பாலங்கள் அமைப்பதால் நெரிசலுக்கு தீர்வு காண முடியாது. தல்லாகுளம் முதல் கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார் பஸ்நிலையம் வழியாக திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள பசுமலை வரை தொடர்ச்சியாக பாலம் அமைத்தால் மட்டுமே, மதுரையின் நெரிசலுக்குத் தீர்வுகாண முடியும். மோசமான சாலைகள், வாகன நெரிசலால் மதுரையின் சுற்றுலா வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x