Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி - கோவை, திருப்பூரில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை : கரோனா தடையால் கோபுரத்தை தரிசனம் செய்த பக்தர்கள்

கோவை/திருப்பூர்

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்களின்றி சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றன.

நடப்பாண்டு கரோனா அச்சம் காரணமாக, வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, மாவட்டத்தில் உள்ள காரமடை அரங்கநாதர் கோயில், உக்கடத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், ராஜவீதியில் உள்ள வெங்கடரமண பெருமாள் கோயில், பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோயில், பீளமேட்டில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோயில், அன்னூர் அருகே மொண்டிபாளையத்தில் உள்ள பெருமாள் கோயில், தென்திருப்பதி பெருமாள் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நின்று, கோபுரத்தை தரிசனம் செய்து சென்றனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ஆழியாறு சாலையில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் நடை சாத்தப்பட்டது. புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கோயில் அருகே கோட்டூர் போலீஸார் தடுப்பு அமைத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வீரராகவ பெருமாள் கோயிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அவிநாசி மொண்டிபாளையம் பெருமாள் கோயில், தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோயில், அவிநாசிபாளையம் ராமசாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மொண்டிபாளையம் கோயிலில் பக்தர்களின்றி திருவீதி உலா நடந்தது.

உடுமலை

உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி உற்சவ பூஜை நடைபெற்றது. கோயில் அர்ச்சகர்கள், கோயில் நிர்வாகிகள் மட்டும் பூஜையில் கலந்து கொண்டனர். அதேபோல கல்யாணவரதராஜ பெருமாள் கோயில், சின்னார் அடுத்துள்ள ஏழுமலையான் கோயில்களிலும் பக்தர்களின்றி, புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x