Published : 19 Sep 2021 03:15 AM
Last Updated : 19 Sep 2021 03:15 AM

நடப்பாண்டில் நெல் சம்பா பயிருக்கு : காப்பீடு செய்ய நவ.15-ம் தேதி கடைசி நாள் :

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-17 சம்பா பருவம் முதல் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு ரூ.1428.14 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நெல் சம்பா பருவத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நெல் சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ.326.15 பிரிமீயம் செலுத்த வேண்டும். ஏக்கருக்கு ரூ.21743.32 இழப்பீடாக வழங்கப்படும். பிரிமீயம் செலுத்த கடைசி நாள் நவ. 15 ஆகும்.

விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் மூவிதழ் அடங்கல் படிவத்தைப் பெற்று, அத்துடன் விண்ணப்ப படிவம், முன்மொழிவு படிவம், ஆதார் கார்டு நகல் மற்றும் வங்கி சேமிப்புக் கணக்கு விவரம் ஆகியவற்றுடன் அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நிர்ணயிக்கப்பட்ட பொது சேவை மையங்கள் மற்றும் விவசாயிகளின் வங்கிக் கணக்கு உள்ள பொது உடமை வங்கிகளை தொடர்பு கொண்டு பிரிமீயம் செலுத்தலாம்.

இத்திட்டத்தில் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் விருப்பத்தின்பேரில் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம்.

இவ்வாறு ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x