Published : 19 Sep 2021 03:17 AM
Last Updated : 19 Sep 2021 03:17 AM
தமிழக சட்டப்பேரவையில் மின்சாரத் துறை மானியக் கோரிக்கையின்போது, புதிதாக ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
தமிழகத்தில் 1989-ல்அப்போதைய முதல்வர் கருணாநிதி, இலவச விவசாய மின் இணைப்பு திட்டத்தை அறிவித்தார். 2003 முதல் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை 4 லட்சத்து 52 ஆயிரத்து 777 விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்துள்ளனர்.
சாதாரண பிரிவில் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. சுயநிதிப் பிரிவில் மின் இணைப்பு பெற ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என 3 வகைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுயநிதிப் பிரிவில் கட்டணம் செலுத்தி பதிவு செய்த பிறகும் மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவாக இணைப்பு வழங்குவதற்காக 2018-ல் தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில், 5 குதிரை திறன் உள்ள மின் மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2.50 லட்சம், 7.50 குதிரை திறனுக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரை திறனுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரை திறனுக்கு ரூ.4 லட்சம் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் 2018, 2019-ம் ஆண்டுகளில் தலா 25 ஆயிரம் இணைப்புகளும், 2020-ல் 50 ஆயிரம் இணைப்புகளும் வழங்கப்பட்டன. இவர்களைத் தவிர கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி இன்னும் 4 லட்சத்து 52 ஆயிரத்து 777 விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் மின் இணைப்புகளில், எந்தெந்த பிரிவில் எவ்வளவு பேருக்கு இணைப்பு வழங்கப்படும் என்பது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறும்போது, "கடந்த மாதம் வரை சாதாரணப் பிரிவில் சுமார் 2.83 லட்சம் பேரும், சுயநிதி மற்றும் தட்கல் பிரிவில் 1.69 லட்சம் பேரும் விவசாய மின் இணைப்புக்காக காத்திருக்கின்றனர்.
தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளில், ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு பேருக்கு இணைப்பு வழங்கலாம் என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என்றனர்.
சிறப்பு பிரிவினர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT