Published : 14 Aug 2021 03:18 AM
Last Updated : 14 Aug 2021 03:18 AM

கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் - தொழில் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை : கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை

தொழில் நிறுவனங்கள் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று பரவலைத் தடுக்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கிணத்துக்கடவு அருகேயுள்ள வடசித்தூர் காட்டம்பட்டியில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் 26 பேர் சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களை மீட்ட சுகாதாரத்துறையினர், கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு பணியாற்றும் 310 பேருக்கு கரோனா பரிசோதனையையும் நடத்தியுள்ளனர். மேலும், 465 பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் கட்டாயம் கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினிகளை கொண்டு கழுவுவது, உடல் வெப்ப நிலை பரிசோதனை ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தொழில் நிறுவனங்கள் தினமும் பணியாளர்கள் பணிபுரியும் இடங்களை சீரான கால இடைவெளியில் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள அங்காடிகளின் பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழில் நிறுவனங்களில் தங்கி பணிபுரியும் பணியாளர்களுக்கு கரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தங்கும் வசதி செய்யப்பட வேண்டும். மேற்கண்ட தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், அங்காடிகள் ஆகியவற்றை தணிக்கை செய்ய பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தணிக்கை செய்யும்போது, ஏதேனும் குறைகள் காணப்பட்டால், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ல் உள்ள விதி 51-60-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

கரோனா நிலவரம்

கோவை மாவட்டத்தில் நேற்று 236 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தினர் கூறும்போது,‘‘மாவட்டத்தில் 24 ஆய்வகங்கள் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நேற்று மட்டும் 12,240 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2.32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சைக்கு பின்னர் 2.27 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தொற்று தீவிரமாகி 2,207 பேர் உயிரிழந்துள்ளனர். 2,358 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, மாநகராட்சிப் பகுதியில் 38 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x