Published : 14 Aug 2021 03:19 AM
Last Updated : 14 Aug 2021 03:19 AM

ஆதிதிராவிடப் பள்ளிகள் கட்டமைப்பு மேம்பாடு - பட்ஜெட்டில் ரூ.123 கோடி ஒதுக்கீடு :

சென்னை

ஆதிதிராவிடப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பட்ஜெட்டில் ரூ.123 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் இதுவரை 4 பேர் மட்டுமே பயன் அடைந்துள்ளனர். எனவே, அந்த திட்டத்தை மாற்றிஅமைத்து அதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.5 கோடியாக உயர்த்தப்படும்.

அதேபோல், பிஎச்டி படிக்கும்மாணவர்களுக்கான உதவித்தொகையும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் என்றளவில் அதிகரிக்கப்படும். நபார்டு வங்கியின் நிதியுதவி மூலம் ஆதிதிராவிடப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.123.02 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் பயிலும் மாணவர்களின் மாதாந்திர சில்லறை செலவின கட்டண உதவித்தொகை 2 மடங்காக உயர்த்தப்படும். தற்போதுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் ரூ.25 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

மசூதிகள், தேவாலயங்கள்

இதுதவிர மசூதிகள், தேவாலயங்களை புதுப்பிக்க தலா ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் முஸ்லீம் பெண்கள்உதவி சங்கத்துக்கு ரூ.4.15 கோடியும், கிறிஸ்தவப் பெண்கள் உதவிசங்கத்துக்கு ரூ.2.97 கோடியும்வழங்கப்படும். சிறுபான்மையின பள்ளி, கல்லூரி மாணவர்களுக் கான நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.114.65 கோடி பகிர்ந்தளிக்கப்படும்.

மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கல்லூரி விடுதிகளின் தரத்தை மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள், தங்களின் ஓர் உதவியாளருடன் மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.

காத்திருப்புப் பட்டியலில் உள்ள9,173 தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு மாத பராமரிப்புத் தொகை ரூ.1,500 வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு ரூ.404.64 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 2021-22-ம் ஆண்டில் காத்திருப்புப் பட்டியலில் உள்ள 9,185 மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்கள் விரும்பும் கருவி வழங்கப்படுவதை உறுதிசெய்ய நிதி ஒதுக்கீடு ரூ.50.66 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

‘ரைட்ஸ்’ புதிய திட்டம் தொடக்கம்

தகுதியான மாற்றுத் திறனாளிகள், தாங்கள் பயன்படுத்த விரும்பும் சாதனங்களை தேர்வு செய்யும் விதமாக நேரடி மானியம் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. உலகவங்கியின் உதவியுடன் ‘ரைட்ஸ்’ என்ற திட்டம் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் குறைபாடுகளை தொடக்க நிலையில் கண்டறிதல்,பராமரிப்பு, மறுவாழ்வு, திறன் மேம்பாடு, சுய உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x