Published : 31 Jul 2021 03:16 AM
Last Updated : 31 Jul 2021 03:16 AM
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நெற்பயிருக்கு தேவையான உரங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு 3.10 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இலக்கைத் தாண்டி 3.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, நெற்பயிர்கள் அனைத்தும் வளரும் பருவத்தில் உள்ள நிலையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் உரக் கடைகளில் யூரியா, பொட்டாஷ், டிஏபி உரங்கள் கிடைக்காததால், விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா, ஒரு மூட்டை டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் ஆகியவை 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் 57 ஆயிரம் ஏக்கருக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ள நிலையில், 46 ஆயிரம் ஏக்கருக்கு மட்டுமே மானிய உரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் முழுமையாக மானிய உரங்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் உரங்கள் விநியோகம் செய்வதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறுவை தொகுப்பு திட்டத்தில் பதிவு செய்யாமல் உள்ள விவசாயிகள் நடவு செய்துள்ள நெற்பயிர்களுக்கு தேவையான உரங்களை தனியார் உரக் கடைகளில் மட்டுமே பெற முடியும். ஆனால், அங்கும் உரங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் என்.வி.கண்ணன் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி காலங்களில் வழக்கமாக வரும் உரங்கள், குறுவை தொகுப்புத் திட்டத்துக்கு மாற்றப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டதால், விவசாயிகளுக்கு போதிய உரம் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நெற்பயிர்களுக்கு உரிய நேரத்தில் உரமிட்டால் மட்டுமே மகசூல் கிடைக்கும்.
எனவே, தற்போது நிலவும் உரத் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை தரக் கட்டுப்பாடு உதவி இயக்குநர் குமரன் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 1.35 லட்சம் ஏக்கரில் குறுவை நடவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கு மட்டும் 12 ஆயிரம் டன் யூரியா தேவைப்படுகிறது. ஆனால், கடந்த 27-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்த 700 டன் யூரியா உட்பட இதுவரை 2,600 டன் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே உரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதால், அங்கிருந்து வந்தவுடன், உடனுக்குடன் அவை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. தற்போது, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரேநேரத்தில் நெல் சாகுபடி நடைபெறுவதால், யூரியா உள்ளிட்ட உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு விரைவில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT