Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

பொங்கலூர் கிராம விவசாய தோட்டத்தில் கோவை வேளாண் பல்கலை. மாணவிகள் ஆய்வு

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரிலுள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில்கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதி ஆண்டு பி.டெக். பட்டப்படிப்பு பயிலும் 7 மாணவிகள் ஒரு மாதம் தங்கி, விவசாயிகள் தோட்டத்துக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, விவசாயிகளுக்கு சில செயல் விளக்கங்களை மாணவிகள் செய்து காண்பித்தனர்.

திட்ட ஒருங்கிணைப்பாளர் ந.ஆனந்தராஜா, தோட்டக்கலை உதவிப் பேராசிரியர் க.வி.ராஜலிங்கம் ஆகியோர் குழு, மாணவிகளுக்கு ஆசிரியர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

பொங்கலூர் வட்டாரத்தைச் சேர்ந்த எலவந்தி கிராமத்திலுள்ள தர்மலிங்கத்தின் விவசாயி தோட்டத்தில் 10 ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. வெங்காயப் பயிரில் அடிச்சாம்பல் நோய் மற்றும் கொலிட்ரோடைகம் வாடல் நோய் தாக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.

அடிச்சாம்பல் நோய் தாக்கப்பட்ட செடிகளின் இலையின் மேல்புறத்தில் வெள்ளைநிறத்தில் பஞ்சு போன்ற பூசண இழை வளர்ச்சி காணப்படும். இறுதியில் இலைகள் காய்ந்துவிடும். இதை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் மேங்கோசெப் மருந்தை, நாற்று நட்டபின் 20 நாட்கள் கழித்து தெளிக்க வேண்டும். பின்னர் 10 முதல் 12 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை திரும்பவும் தெளிக்க வேண்டும்.

கொலிட்ரோடைகம் வாடல் நோயால் தாக்கப்பட்ட செடிகளின் இலைகளில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். தாள்கள் காய்ந்துவிடும். சிறு பகுதிகளில் தோன்றும் இந்நோயானது, நாளடைவில் வயல் முழுவதும் பரவும். இதை கட்டுப்படுத்த இலைவழி தெளிப்பு மூலமாக இரண்டு அல்லது மூன்று முறை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு அல்லது 1 கிராம் ஹெக்சோகோனசோல் அல்லது 1 கிராம் பிரோபிகோனசோல் மருந்தை, நாற்று நட்ட 30 நாட்களுக்கு பிறகு 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

நீர் பாய்ச்சும் நீரில் மருந்தை கலந்து நீர் பாய்ச்சக்கூடாது. சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகளிடையே இப்பிரச்சினை இருந்தால், இத்தொழில்நுட்பத்தைப் பின்பற்றி பலன் பெறலாம் என்று மாணவிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x