Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM
தேங்காய் சார்ந்த உணவு மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனம் அமைக்க ரூ.10 லட்சம் வரை மானியம் பெற தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும்விதமாக மத்திய அரசின் ‘ஆத்மநிர்பார் பாரத் அபியான்’ திட்டத்தின்கீழ் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 60 சதவீத நிதி, மாநில அரசின் 40 சதவீத பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ், ஏற்கெனவே உள்ள தொழில் விரிவாக்கத்துக்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தேங்காய் சார்ந்த பொருட்கள் பதப்படுத்துதல், பிற உணவு பதப்படுத்தும்தொழில்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அதற்கு விண்ணப்பதாரர்18 வயது நிரம்பியவராக இருக்கவேண்டும். குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். நிறுவனத்தில் 10 தொழிலாளர்களுக்கு குறைவாக பணிபுரிய வேண்டும்.
இதுதவிர, புதிதாக தேங்காய் பொருட்கள் பதப்படுத்தும் குறுந்தொழில்கள் தொடங்கவும் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. அதற்கு திட்டமதிப்பீட்டில் 35 சதவீதம் (அதிகபட்சம் ரூ.10லட்சம்) மானியமாக வழங்கப்படுகிறது. பயனாளிகளின் சொந்த முதலீடு திட்டமதிப்பீட்டில் 10 சதவீதம் இருக்க வேண்டும்.
மீதமுள்ள தொகை வங்கியில் இருந்துகடனாக வழங்கப்படும். தற்போது மாவட்ட அளவில் இயங்கிவரும் தேங்காய் சார்ந்த பொருட்கள் பதப்படுத்தும் குறு நிறுவனங்கள், புதிதாக ஈடுபட உள்ள குறு நிறுவனங்கள், விருப்பமுள்ள தனி நபர்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க www.pmfme.mofpi.gov.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது மாவட்ட தொழில் மையத்தில் செயல்பட்டுவரும் இலவச பொது வசதி மையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களை 9994208829, 9788769890 என்ற எண்களில் தொடர்புகொண்டு கேட்கலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT