Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM
காரைக்கால்/ நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை
மாசி மக விழாவையொட்டி, பட்டினச்சேரி கடற்கரையில் திருக் கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் உள்ளிட்ட 7 பெருமாள்கள் தீர்த்த வாரி கண்டருளும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம் திரு மலராயன்பட்டினம் அருகே பட்டினச் சேரி கடற்கரையில், மாசி மகத்தையொட்டி ஆண்டுதோறும் நடத்தப் படும் பெருமாள்கள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி, நிகழாண்டு நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி, நாகை மாவட்டம் திருமருகல் அருகேயுள்ள திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயிலி லிருந்து நேற்று அதிகாலை பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி திருமருகலுக்கு வந்தார். தொடர்ந்து, திருமருகலில் உள்ள வரதராஜப் பெருமாளுடன் சேர்ந்து, காரைக்கால் மாவட்டம் பட்டினச்சேரி வெள்ள மண்ட பத்துக்கு எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
பின்னர், அங்கிருந்து பவழக்கால் சப்பரத்தில், தங்க கருட வாகனத்தில், சிறப்பு அலங்காரத் தில் சவுரிராஜப் பெருமாள், சமுத்திர தீர்த்தவாரிக்காக பட்டினச்சேரி கடற்கரையில் எழுந்தரு ளினார். மேலும், திருமருகல் வரதராஜப் பெருமாள், திருமலை ராயன்பட்டினம் வீழி வரதராஜப் பெருமாள், ரகுநாதப் பெருமாள், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், நிரவி கரியமாணிக்கப் பெருமாள், காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் ஆகிய சுவாமிகள் தனித்தனிப் பல்லக்கில் எழுந் தருளி, கடற்கரையில் ஒன்றாக சேர்ந்து தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தீர்த்த வாரிக்குப் பின், கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அனைத்து பெருமாள்களும் அமர வைக்கப்பட்டனர். இதில், நாகை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, பெருமாள்களை தரிசனம் செய்தனர்.
நாகை புதிய கடற்கரையில்...
மாசிமகத்தை முன்னிட்டு, நாகை நீலாயதாட்சியம்மன் கோயில், சவுந்தரராஜ பெருமாள் கோயில், பாப்பாக்கோவில் கஸ்தூரி ரங்கநாத பெருமாள் கோயில், வெளிப்பாளையம் வரதராஜ பெருமாள் கோயில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோயில், நாகை சட்டையப்பர் கோயில், மெய்க்கண்ட மூர்த்தி கோயில், நடுவதீஸ்வரர் கோயில், கிருஷ்ணன் கோயில், தாய் மூகாம்பிகை கோயில், அந்தணப்பேட்டை நித்திய கல்யாணப் பெருமாள் கோயில், திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் இருந்து சுவாமிகள் நாகை புதிய கடற்கரையில் நேற்று எழுந்தருள, தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி, ஒவ்வொரு கோயிலிலிருந்தும் சுவாமி வாகனங்களுடன் கொண்டு வரப்பட்ட அஸ்திரதேவருக்கு கடலில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கடலில் புனித நீராடினர். முன்னதாக, நாகை நம்பியார் நகர், ஆரியநாட்டுத் தெரு ஆகிய மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் சுவாமிகளுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர்.
விழாவில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் ராணி, நீலாயதாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலர் பூமிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல, நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை, மயிலாடு துறை காவிரி துலாக்கட்டம், பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி கடற்கரைகளிலும் நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT