Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

நெல்லை மாவட்டத்தில் 316 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை தேர்தலை அமைதியாக, நியாயமாக நடத்த ஏற்பாடுகள் தயார் சமூகவலை தளங்களைக் கண்காணிக்க குழு

திருநெல்வேலி

``திருநெல்வேலி மாவட்டத்தில் 316 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. தேர்தலை நியாயமாகவும், அமைதியாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன” என்று, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான வே. விஷ்ணு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 19-ம் தேதி கடைசி. அடுத்த நாள் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப்பெற வரும் 22-ம் தேதி கடைசிநாளாகும். வரும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவும், மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

தேர்தல் அலுவலர்கள் விவரம்

திருநெல்வேலி தொகுதி - உதவி ஆட்சியர் (திருநெல்வேலி), அம்பாசமுத்திரம்- சேரன்மகாதேவி சார் ஆட்சியர், பாளையங்கோட்டை- திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர், நாங்குநேரி- திருநெல்வேலி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், ராதாபுரம்- திருநெல்வேலி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்.

மாவட்டத்தில் 3,319 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2,506 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2,653 விவிபாட் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் 1,924 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில், அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

சட்டப்பேரவை தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள்: திருநெல்வேலி- 408, அம்பாசமுத்திரம்- 356, பாளையங்கோட்டை- 389, நாங்குநேரி- 395, ராதாபுரம்- 376.

தொகுதி வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை: திருநெல்வேலி- 2,91,156, அம்பாசமுத்திரம்- 2,44,048, பாளையங்கோட்டை- 2,71,725, நாங்குநேரி- 2,76,356, ராதாபுரம்- 2,69,874. மொத்த வாக்காளர்கள்- 1,35,3159.

புகார் தெரிவிக்க எண்கள்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில், ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான நடத்தை விதிமீறல்களை கண்டறியும் பொருட்டும், சோதனை தணிக்கை செய்யவும் 15 பறக்கும்படை குழுக்கள், 15 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 10 இதர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பொதுமக்கள் தேர்தல் தொடர்பான நடத்தை விதிமீறல் புகார்களை, 1800 425 8373 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 1950 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம்.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

திருநெல்வேலி தொகுதியில் 88, அம்பாசமுத்திரத்தில் 49, பாளையங் கோட்டையில் 109, நாங்கு நேரியில் 49, ராதாபுரத்தில் 21 என, மொத்தம் 316 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.

சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். சமூகவலை தளங்களைக் கண்காணிக்கவும் குழு அமைக்கப்படும். மாவட்டத்தில் தேர்தலை நியாயமாகவும், அமைதியாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x