Last Updated : 30 Jan, 2021 03:15 AM

 

Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

பல்லடம் அருகே பிஏபி கிளை வாய்க்காலில் உடைப்பு விளைநிலத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் பாதிப்பு வெங்காயம் பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அச்சம்

திருப்பூர்

பல்லடம் அருகே பிஏபி கிளை வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டுள்ள பல்லடம் வட்டம் அம்மாபாளையத்தைச் சேர்ந்த விவசாயி சதீஷ்குமார், ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறும்போது, "பிஏபி பிரதான வாய்க்காலின் கிளை வாய்க்காலானது, சாமளாபுரம் குளத்துக்கு செல்கிறது. இந்த வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுவதால், பொங்கலூரில் இருந்து சாமளாபுரம் வரையுள்ள வழியோர கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. வழக்கமாக திறக்கப்படும் தண்ணீரானது, வாய்க்காலின் மேற்பரப்பிலிருந்து ஒரு அடி தாழ்வாகவே திறக்கப்படும். தற்போது வாய்க்காலின் மேற்பரப்பை ஒட்டி செல்லும் அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வாய்க்காலின் பக்கவாட்டு பகுதிகளிலும் கரைகள் சேதமடைந்துள்ளன. கரைகளில் பெரிய அளவிலான துளைகள், சிமென்ட் காரைகள் பெயர்ந்து சிதிலமடைந்துள்ளன. இதனால், தண்ணீர் திறந்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால், வாய்க்கால் சேதமடைந்த பகுதிகள் மூலமாக விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

பல்லடம் - மங்கலம் சாலையிலுள்ள எனது 6 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ளேன். தண்ணீர் புகுந்துள்ளதால், எங்கள் விளைநிலத்தில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயப் பயிர்கள் அனைத்தும் அழுகிவிடும். இதன்மூலமாக பாதிப்பை சந்திக்க நேரிடும்.

இதேபோல, பல இடங்களில் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வாய்க்காலில் வரும் நீரின் அளவை அதிகாரிகள் விரைவாக குறைக்க வேண்டும். இல்லையெனில், ஏதேனும் மாற்று நடவடிக்கைகளை எடுத்து, விளைநிலங்களுக்குள் தண்ணீர் வருவதை தடுத்து, நஷ்டத்திலிருந்து காக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "தற்போது பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு 3 நாட்கள் ஆகி விட்டன. இன்னும் 6 நாட்கள் வரை தண்ணீர் செல்ல வேண்டியுள்ளது. இதில், வாய்க்காலின் ஒருபக்க கரையின் மறுபுறத்திலுள்ள மண்ணை விவசாயிகள் வெட்டி எடுப்பதால், பல இடங்களில் கரையின் பக்கவாட்டு பகுதி குறுகலாகியுள்ளது. இதுவே உடைப்பு ஏற்படுவதற்கும், துளைகள் ஏற்படுவதற்கும் காரணம். இதுகுறித்து விவசாயிகளிடம் பலமுறை அறிவுறுத்தி விட்டோம். தற்போது உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்துள்ளோம். தண்ணீர் செல்லும் வேகம் குறைந்துள்ளது. தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டவுடன், சேதமடைந்துள்ள கரையின் பகுதிகள் மண் அல்லது சிமென்ட் மூலமாக சரி செய்யப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x