Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

நீலகிரியில் சோலைக்காடுகளின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட வனத்துறை

உதகை

கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் வளரும் ஈரம் நிறைந்த பசுமை மாறாக்காடுகள் உலகில் சில இடங்களில் மட்டுமே உள்ளன. இந்தக் காடுகள் புல்வெளிகளுடன் சேர்ந்தே இருக்கும் தன்மை கொண்டவை. ஒட்டுமொத்தக் காட்டுயிர்களையும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன இந்த சோலை மரக்காடுகள்.

அடைமழை, புயல் காற்று,உறைபனி என எல்லா காலநிலையையும் தாக்குப்பிடித்து உயிர்வாழும் இந்தச் சோலைமரங்கள் ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்ட அந்நிய களைத் தாவரங்களை மட்டும் எதிர்கொள்ள முடியாமல் போனது.

ஆசியாவில் சில இடங்களில் மட்டுமே வளரும் பல லட்சம் ஆண்டு பரிணாமத்தில் உருவான சோலை மரக்காட்டை மீட்டெடுக்கும் வகையில் நீலகிரி மாவட்டம் கேர்ன்ஹில், அவலாஞ்சி, கோத்தகிரி பகுதிகளில் 5000 மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.மிக மெதுவாக வளரக்கூடிய இந்த வகை மரங்களை வளர்ப்பது மிக சவாலான பணியாக உள்ளது. நகரில் நிலவும் காற்று மாசை தடுக்கும் வகையிலும், சோலை மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியிலும் வனத்துறை களம் இறங்கி உள்ளது.

வனத்துறையினர் கூறும்போது,“உதகை தீட்டுக்கல் குப்பைக்கிடங்கில் கொட்டப்படும் பல்வேறு கழிவுகள் எரிக்கப்படுவதால், காற்று மாசடைகிறது.

இதனால் பொதுமக்களுக்கு மட்டுமின்றி விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், காற்று மாசை தடுக்கும் நோக்கில் தற்போது முதற்கட்டமாக உதகை அருகேயுள்ள கேர்ன்ஹில் வனப்பகுதியில் ஆயிரம், எல்க்ஹில் பகுதியில் ஆயிரம், அவலாஞ்சி பகுதியில் 3 ஆயிரம் சோலை மர நாற்றுகள் நடவு செய்யத் திட்டமிட்டுள்ளோம். இந்த மரக்கன்றுகள் வளர்ந்து மரமாகியவுடன் வெளியில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை அதிகளவு உட்கிரகித்து எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். இதனால், இப்பகுதியில் சோலைமரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன’’ என்றனர்.

நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசுவாமி கூறும்போது, “மாவட்டம்முழுவதும் சீகை, யூகலிப்டஸ் மரங்களை அகற்றிவருகிறோம். கேர்ன்ஹில், எல்க்ஹில், அவலாஞ்சி மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் 5 ஆயிரம் சோலை மரக்கன்றுகளை நடவு செய்துவருகிறோம். கேர்ன்ஹில் மற்றும் அவலாஞ்சியில் நடவுப் பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் எல்க்ஹில் பகுதியில் நாற்று நடவுப் பணிகள் தொடங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் அதிகளவு சோலை மரங்கள் நடப்படுகின்றன” என்றார்.

நீலகிரி வனத்துறையினர் எடுத்துள்ள முயற்சி சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x