Published : 30 Jan 2021 03:16 AM
Last Updated : 30 Jan 2021 03:16 AM
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த தொட்ட முதுகரையில், 13-ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கல்வெட்டறிஞர் சு.ராசகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் ஏராளமான நடுகற்கள் பதிவாகியுள்ளன. தாளவாடி தொடக்கத்தில் இருந்தே கங்கர்களின் ஆதிக்கத்தில் இருந்துள்ளது. தமிழகத்தின் உட்பகுதியில் ஏற்பட்ட பேரரசுகள் எதுவும் இங்கு தங்களின் ஆதிக்கத்தை பரவியதாக சான்றுகள் இல்லை. தாளவாடி பகுதியில் பழமையான தமிழ், கன்னடக் கல்வெட்டுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. 7,8-ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டுகளில் பழங்கன்னட எழுத்துப் பொறிப்புகள் காணப் படுகின்றன. 10-ம் நூற்றாண்டிற்கு பிறகு தமிழ் கல்வெட்டுகள் நிறைய கிடைக்கத் தொடங்குகின்றன.
தாளவாடி தொட்ட முதுகரையில் தற்போது கிடைத்துள்ள நான்கு நடுகற்களில் மூன்று தமிழிலும், ஒன்று கன்னட மொழியிலும் எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டில், போசாளர் வீரசோமேஸ்வரன் ஆட்சி காலத்தில், தாளவாடிக்கு அருகேயுள்ள தொட்ட முதுகரை பகுதியில் ஏற்பட்ட ஆநிரை பூசல் நிகழ்வை சொல்கின்றன. சகரை ஆண்டு 1171 எனத் தொடங்கும் குறிப்பை கொண்டு 1249-ம் ஆண்டு தை மாதம் எனக் கல்வெட்டின் காலத்தை தெளிவாக வரையறுக்க முடிகிறது.
முதல் நடுகல் கல்வெட்டில், "சிறிய முதுகரையில் ராவா காமுண்டன் மகன் மஞ்சியண்ணன், தங்கள் மாடுகளை கவர்ந்து போக வந்த கள்வர்கள் நான்கு பேரைக் குத்தி, தானும் வீழ்ந்தான்" என்று மக்களின் பேச்சு வழக்கு மொழியில் பதிவு செய்கிறது. இரண்டாவது நடுகல் கல்வெட்டில் "கங்க காமுண்டன் மகன் பெரியதாழ காமுண்டனும், கப்பநாடாழ்வானும் மாடு கவர வந்த 10 கள்வர்களை குத்திக் கொன்று, இவர்களும் மடிந்த நிகழ்வை பதிவு செய்கிறது. மூன்றாவது நடுகல் கல்வெட்டு "சங்கர காமுண்டன் மகன் மாதையன் அவரின் மக்கள் இருவரும், தங்கள் ஊரின் ஆட்டை, மாட்டை கவர வந்த கள்வர்களுடன் போரிட்டு, இறந்த நிகழ்வைக் குறிக்கிறது. இங்கு கண்டறியப்பட்ட கன்னட கல்வெட்டு மைசூர் தொல்லியல் துறை கல்வெட்டியல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தாளவாடி சுற்றுவட்டாரத்தில் மொழி பேதங்களின்றி நடுகற்கள் அனைத்தும் அவர்களின் முன்னோர்கள் என்று கருதி பந்தலேசுவரா, இராவலேசுவரா என பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர். இந்த கல்வெட்டுகளை
தாளவாடி மய்யம் ஜான் பீட்டர், யாக்கை தன்னார்வலர்கள் சுதாகர் நல்லியப்பன், குமரவேல் ராமசாமி ஆகியோர் படியெடுத்துள்ளனர், எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT