Published : 08 Jan 2021 06:54 AM
Last Updated : 08 Jan 2021 06:54 AM

புதுச்சேரி ரேஷன் கடைகளை மூடியது கிரண்பேடியும், மத்திய உள்துறையும்தான் மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் நாராயணசாமி விளக்கம்

புதுச்சேரி கவிக்குயில் நகரில் மூடிக்கிடக்கும் ரேஷன் கடை. (கோப்புப் படம்)

புதுச்சேரி

புதுச்சேரியில் உள்ள நியாய விலைக் கடைகளை மூட வைத்தது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும்தான் என்று மத்திய உள்துறை இணை அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் நாராயணசாமி பதில் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களிலும் ரேஷன் கடைகள் கடந்த நான்கரை ஆண்டுகளாக செயல்படவில்லை. ரேஷன் கடைகளில் பணிபுரிவோருக்கு ஊதியமும் தரப்படவில்லை. அண்மையில் புதுச்சேரிக்கு வந்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, ‘முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசே இதற்கு காரணம்’ என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த 3-ம் தேதி புதுச்சேரிக்கு வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி, புதுச்சேரி காங்கிரஸ் அரசு நியாயவிலைக் கடைகளை மூடி விட்டதாகவும், ரேஷன் கடைகளே இல்லாத மாநிலமாக புதுச்சேரியை ஆக்கிவிட்டதாகவும் ஒரு தவறான தகவலை பொதுக்கூட்டம் ஒன்றில் கூறியிருக்கிறார். கடந்த 2016-ம்ஆண்டு காங்கிரஸ் அரசு புதுச்சேரியில் பதவியேற்றவுடன் 06.06.2016 அன்று நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தபடி, அனைத்து கார்டுகளுக்கும் மாதம் ஒன்றுக்கு தலா 20 கிலோ அரிசி தர முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பான கோப்பு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

அப்போது, ‘மஞ்சள் அட்டை தாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 10 கிலோ அரிசி மட்டுமே வழங்க வேண்டும்’ என்று தன்னிச்சையாக குறைத்து, அதனை அமல்படுத்த அதிகாரிகளுக்கு கிரண்பேடி உத்தரவிட்டார். தரமான அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் பாராட்டிய நிலையில், நியமன எம்எல்ஏவான பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், ‘அரிசியின் தரம் சரியில்லை’ என்று ஆளுநரிடம் உள்நோக்கத்துடன் புகார் அளித்தார். இதற்காகவே காத்திருந்தது போல உடனே, ‘அரிசிக்குப் பதிலாக பணமாக வழங்க வேண்டும்’ என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். நாங்கள் நேரில் சந்தித்து அரிசி தரகோரினோம். ஆனால் ஆளுநர் ஏற்கவில்லை.

பல தடைகள்

குடும்ப அட்டைகளுக்கு வழங் கப்படுகின்ற அரிசியை இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலம் கொள்முதல் செய்து வழங்கலாம் என்று கூறியதையும் ஏற்கவில்லை. இவ்வாறு பல முறைகளில் அரிசி வழங்குவதில் பல தடைகளை ஏற்படுத்தி உள்ளார்.

அதன் பின், இலவச அரிசியை தொடர்ந்து வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய கோப்பை அவர் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார். மத்திய உள்துறையோ, அரிசிக்கு பதிலாக பணம் தர உத்தரவிட்டது. கிஷன்ரெட்டி இந்த அமைச்சகத்தில் இணை அமைச்சராக உள்ளார்.

இதனால் , இலவச அரிசித் திட்டத்தினை தொடர முடியாமல் போய்விட்டது. இந்த அரிசியை பொது மக்களுக்கு விநியோகம் செய்யத் தரப்படும் தொகைதான் ரேஷன்கடை ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும். இலவச அரிசித் திட்டம் புதுச்சேரி துணைநிலை நிலை ஆளுநரின் விருப்பத்திற்கிணங்க மத்திய உள்துறை அமைச்சகத்தால் நிறுத்தப்பட்டதால் ரேஷன் கடை ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாமல் போனது.

மக்களுக்கு துரோகம்

ஒருபுறம் மத்திய அரசு, ‘அந்தயோதயா அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் உணவு தானியங்களை நாடு முழுக்க வழங்கி வருகிறது. அதேபோல, ‘ஒருநாடு ஒரு ரேஷன் திட்டத்தினையும் அமல்படுத்துகிறது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகமும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் புதுச்சேரி மக்களுக்கு அரிசிக்குப் பதிலாகப் பணமாக வழங்க உத்தரவிடுவது நம் மாநில மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

‘ஒரு நாடு ஒரு ரேஷன்’ திட்டத்தினை மாற்றி அந்தந்த குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்கிற்கு மத்திய அரசே டெல்லியிலிருந்து பணத்தினை செலுத்தலாம் என்று குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் மத்திய உள்துறை அமைச்சகமும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் பரிந்துரைக்க வேண்டியது தானே? புதுச்சேரி மக்கள் மட்டும் ஏமாந்தவர்களா?

புதுச்சேரியில் உள்ள நியாய விலைக் கடைகளை மூட வைத்தது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும் தான். இது குறித்த கோப்புகளையும் கடிதங்களையும் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகப் பெற்று உண்மை நிலையினை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x