Published : 01 Jan 2021 07:53 AM
Last Updated : 01 Jan 2021 07:53 AM
வாரன்டி காலத்துக்குள் பழுதான கணினியை வாடிக்கையாளருக்கு சரிசெய்து தராத விற்பனை நிறுவனம், தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த சிவபாலன், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், "கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு கணினி விற்பனை கடையில் 2017 டிசம்பர் 18-ம் தேதி ரூ.1.02 லட்சம் செலுத்தி ஹெச்.பி. நிறுவன கணினியை வாங்கினேன். அதற்கு 3 ஆண்டுகள் வாரன்டி அளித்தனர்.
இந்நிலையில், அந்தக் கணினி சரிவர வேலை செய்யவில்லை. இதையடுத்து, 2019 நவம்பர் 12-ம் தேதி ஹெச்.பி நிறுவனத்துக்கு புகார் அனுப்பினேன். இதையடுத்து, என்னிடமிருந்த கணினியை பழுது நீக்குவதற்காக பெற்றுச் சென்றனர். ஒரு மாதமாகியும் பழுது நீக்கப்படவில்லை, கணினியும் திருப்பி அளிக்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு முறையான பதிலும் இல்லை. எனவே, கணினியை வாங்க நான் செலுத்திய தொகையை திருப்பி அளிக்கவும், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், கணினி விற்பனை நிறுவனம், தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் ஏ.பி.பாலசந்திரன், உறுப்பினர் சரஸ்வதி ஆகியோர், "கணினியின் வாரன்டி காலத்துக்குள் பழுதை நீக்கித் தராதது சேவைக் குறைபாடாகும். எனவே, மனுதாரர் கணினி வாங்குவதற்காக செலுத்திய ரூ.1.02 லட்சத்தை விற்பனை நிறுவனம், தயாரிப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து, 9 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும். மேலும், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.40 ஆயிரம், வழக்குச் செலவாக ரூ.3 ஆயிரம் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT