Published : 01 Jan 2021 07:53 AM
Last Updated : 01 Jan 2021 07:53 AM

கஞ்சா வியாபாரியிடம் ரூ.70 ஆயிரம் லஞ்சம் பெண் காவல் ஆய்வாளர் உட்பட இருவர் கைது

கோவை

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி விஜயகுமாரை, கோவை மாவட்ட போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் சரோஜினி, தலைமைக் காவலர் ராமசாமி ஆகியோர் இரு தினங்களுக்கு முன் பிடித்துவந்து, விசாரணை நடத்தியுள்ளனர். அண்மைக்காலமாக தான் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் போலீஸார் அவரிடம், "நீ கஞ்சா விற்பதாக வழக்கு பதிவு செய்ய உள்ளோம். ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்தால், குறைந்த அளவு கஞ்சா இருந்ததாக வழக்கு பதிவு செய்து, ஜாமீனில் விட்டுவிடுகிறோம். மறுத்தால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்வோம்" என்று மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து, அவர் ரூ.30 ஆயிரம் கொடுத்துள்ளார். மீதம் பணத்தையும் கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவரது மனைவி மகேஸ்வரி, கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் செய்தார்.

போலீஸாரின் ஏற்பாட்டின்படி, ரூ.70 ஆயிரம் பணத்தை கோவை டாடாபாத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் நேற்று மாலை ஆய்வாளர் சரோஜினி, காவலர் ராமசாமி ஆகியோரிடம் விஜயகுமார் கொடுத்துள்ளார்.

அங்கு மறைந்திருந்த, டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். விசாரணைக்கு பின்னர், ஆய்வாளர் சரோஜினி, காவலர் ராமசாமி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களது அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x