Last Updated : 01 Jan, 2021 07:54 AM

 

Published : 01 Jan 2021 07:54 AM
Last Updated : 01 Jan 2021 07:54 AM

சாத்தான்குளம் சம்பவம் முதல் உள்ஒதுக்கீடு வரை காணொலி விசாரணையில் கவனம் ஈர்த்த உயர் நீதிமன்ற கிளை

மதுரை

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 8 மாத காணொலி விசாரணையில் பல்வேறு முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கரோனா பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டது. அன்று முதல் தற்போது வரை காணொலி வழியாகவே விசாரணை நடைபெறுகிறது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜூன் மாதம் நேரடி விசாரணை தொடங்கப்பட்டது. நீதிபதி, ஊழியர்கள் சிலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு வாரத்தில் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டது.

நேரடி விசாரணையை ஒப்பிடுகையில் காணொலி விசாரணையில் வழக்குகள் தாக்கலாவது குறைவு. இருப்பினும் நேரடி விசாரணையைவிட 2020-ல் 8 மாதங்களாக நடைபெற்று வரும் காணொலி விசாரணையில் பல முக்கிய மான வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கவனம் ஈர்த்துள்ளது.

இரட்டை கொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இதனால் காவல் ஆய்வாளர் தர் உட்பட 10 காவலர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

உயர் நீதிமன்றத்தின் தொடர் கண் காணிப்பு காரணமாக கைது செய்யப்பட்ட காவலர்கள் ஜாமீன் கிடைக்காமல் தொடர்ந்து சிறையில் உள்ளனர். மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையும் தொடங்கியுள்ளது.

உள்ஒதுக்கீடு

தமிழகத்தில் நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு வெறும் கனவாகவே இருந்தது. இந்த சூழ்நிலையில் நடப்பு கல்வியாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அவசர சட்டம் நிறைவேற்றியது. இதற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் நடப்பு கல்வியாண்டில் உள் ஒதுக்கீடு அமலாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றக் கிளை அமர்வில் விசா ரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி களின் கேள்விக்கணைகளால் ஆளுநரின் முடிவுக்காகக் காத்திருக்காமல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அடுத்த சில நாளில் ஆளுநரும் ஒப்புதல் வழங்கினார். இதனால் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ சீட் கிடைத்துள்ளது.

மருத்துவ கல்வி கட்டணம்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த சிரமப் பட்டனர். இதனால் பலர் சீட் கிடைத்தும் சேரவில்லை. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசியல் கட்சிகள் ஏன் செலுத்தக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விக் கட்டணத்தை ஏற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத் தொடர்ந்து கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்தார் முதல்வர் பழனிசாமி. இதனால் தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மிக்குத் தடை விதிக்கக் கோரி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவை விசாரணைக்கு வந்தபோது இளைஞர்கள் உயிரிழப்புக்கும், பணத்தை இழப்பதற்கும் பெரிதும் காரணமாக இருந்து வரும் ஆன்லைன் ரம்மிக்குத் தடை விதிக்க வேண்டும் என நீதிபதிகள் உறுதியாக தெரிவித்தனர். இதையடுத்து ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

தமிழ் வழிக்கல்வி சலுகை

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திருத்த மசோதாவுக்கு 8 மாதங்களாக ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்தார். இது தொடர்பாக வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இதனால் அனைத்து படிப்புகளையும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 சதவீத இடஒதுக்கீடு சலுகை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சித்த மருந்தகம்

தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சித்த மருந்தகம் அமைப்பது என்பது 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் முடிவு. இருப்பினும் வெறும் 5 கோயில்களில் மட்டும் சித்த மருந்தகம் திறக்கப்பட்டது. அரசாணை அடிப்படை யில் அனைத்துக் கோயில்களிலும் சித்த மருந்தகம் திறக்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் 45 கோயில்களில் சித்த மருந்தகம் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அகழாய்வு தொடர்பான வழக்கில் தமிழகத்தில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் குறித்து முக்கிய இடங்களில் தகவல் பலகை வைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தற்போது பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் தமிழக தொல்லியல் நினைவுச் சின்னங்கள் குறித்த தகவல் பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர காவல் நிலையம் வரும் பொதுமக்களைப் போலீஸார் மரியாதை யுடன் நடத்த வேண்டும். இது தொடர்பாக அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும், சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு திருமணம் பதிவு செய்ய வருவோரை அலையவிடக்கூடாது, நில அளவீட்டுப் பணியை 30 நாளில் முடிக்காத அதிகாரி களைப் பணி நீக்கம் செய்ய வேண் டும், குற்றச்சம்பவங்கள் தொடர் பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், மொழி விவகாரங்களில் உணர்வுகளைத் தூண்டும் வகையில் மத்திய அரசு முடிவெடுக்கக் கூடாது, குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கவிடாமல் தடுக்க குற்ற வழக்கு களை எப்படி விசாரிக்க வேண்டும் எனப் போலீஸாருக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு உத்தரவுகளை 2020-ல் உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x