Published : 01 Jan 2021 07:54 AM
Last Updated : 01 Jan 2021 07:54 AM
`திருநெல்வேலியிலிருந்து மதுரை, நாமக்கல் வழியாக பெங்களூ ருவுக்கு ஜனசதாப்தி ரயில் இயக்க வேண்டும்’ என்று பயணிகள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
தென்மாவட்டங்களிலிருந்து பெங்களூருவுக்கு, தற்போது தினசரி ரயிலாக நாகர்கோவில் - பெங்களூரு ரயில் மற்றும் தூத்துக்குடி – மைசூரு ரயில் என 2 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தென்மாவட்ட பயணிகளுக்கு மிக குறைந்த அளவே இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், டிக்கெட் முன்பதிவு விரைவில் நிரம்பிவிடுகிறது.
நாகர்கோவில்- பெங்களூரு ரயில், காலை 9.30 மணிக்கு பின்னரே பெங்களூரு சென்றடைகிறது. இதனால் தேர்வுகள், அலுவலகப் பணிக்கு செல்வோர் மற்றும் ஐடி நிறுவனங்களில் நேர்காணலுக்கு செல்வோர் இந்த ரயிலில் செல்வது கிடையாது. அதிக கட்டணம் செலுத்தி தனியார் ஆம்னி பேருந்துகளில் செல்கிறார்கள்.
தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலியிலிருந்து மதுரை, நாமக்கல் வழியாக பெங்களூருக்கு ஜனசதாப்தி ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடர்பாக ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறும்போது, ``இந்திய ரயில்வேத்துறை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட அதிவேக ரயில்களை ராஜதானி, டோரோண்டோ, சதாப்தி, ஜனசதாப்தி அந்த்யோதயா என்ற பெயர்களில் இயக்கி வருகிறது. இவற்றில் ஜனசதாப்தி ரயில் பகல்நேரத்தில் இயக்கப்படுபவை. நடுத்தரவர்க்க பயணிகளுக்கு ஏற்ற வகையில் 2-ம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
தமிழகத்தில் கோவை – மயிலாடுதுறை மற்றும் சென்னை – விஜயவாடா ஆகிய இரு ஜனசதாப்தி ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தென்மாவட்ட பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, திருநெல்வேலியில் இருந்து மதுரை, நாமக்கல், ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு பகல்நேர ஜனசதாப்தி தினசரி ரயில் இயக்கினால், தென்மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரவு நேர ரயில்களில் உள்ள கட்டணத்தை காட்டிலும், பகல்நேரங்களில் இயக்கப்படும் ரயில்களில் கட்டணம் குறைவு. இதனால், தமிழகத்தில் பகல் நேர ரயில்களை அதிகளவில் இயக்க வேண்டும்” என்று தெரிவிக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT