Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள நடூர் ஆதிதிராவிடர் காலனியில் கடந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி சிவசுப்பிரமணியம் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவர் பலத்த மழை காரணமாக இடிந்து, அருகில் உள்ள வீடுகளின் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள், அங்குள்ள குடியிருப்புகளில் வசிப்போர் உள்ளிட்டோர் விபத்து நேரிட்ட இடத்தில் நேற்று திரண்டு, மலர்கள் தூவி, அஞ்சலி செலுத்தினர். வெளி நபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள், இயக்கங்களைச் சேர்ந்தோர் அஞ்சலி செலுத்த போலீஸார் தடை விதித்திருந்தனர். எனினும், அங்கிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு முன்னதாக, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே இடம் ஒதுக்கி, அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்த போலீஸார் அனுமதித்திருந்தனர். அங்கு 22 அமைப்புகளை உள்ளடக்கிய திராவிடர் பண்பாட்டு கூட்டு இயக்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும், மீண்டும் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது சிலர் கோவை-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர். இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தலைமையில் 2 கூடுதல் எஸ்.பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 550 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திராவிட தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT