Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்கள், பாட்டில்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி காயப்படுத்தியதற்காக சந்தோஷம் அடைவதாக அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருப்பதற்கு ராமேசுவரம் மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பூண்டிராஜன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஆறு பேர் கடந்த திங்கட்கிழமை மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் தலைமன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கற்கள், பாட்டில்களை வீசித் தாக்கியதில் மீனவர் சுரேஷ்(38) காயமடைந்தார்.
இச்சம்பவம் சந்தோஷம் அளிப்பதாக இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை கடற்படை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தனது பாராட்டை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவப் பிரதிநிதி சேசு பெர்னாண்டோ கூறியதாவது:
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. அவரது கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
மீனவர் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் அல்லது கச்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT