Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பாததால் ஏமாற்றத்துடன் திரும்பும் வெளிநாட்டுப் பறவைகள்

ராமேசுவரம்நீர் நிலைகள் நிரம்பாததால் ராமேசுவரம் கடற்பகுதியிலிருந்து இடம் பெயரும் நீர் காகங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா தீவுகள், தனுஷ்கோடி மற்றும் காஞ்சிரங்குடி, சித்திரங்குடி, மேல செல்வனூர், கீழ செல்வனூர் ஆகிய பகுதிகளில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இங்கு பிளமிங்கோ, ரஷ்ய நீர் வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, உள்ளன், அரிவாள் மூக்கன், நாரை, பாம்பு தாரா, நீர் காகங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து பின்னர் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தங்கள் குஞ்சுகளுடன் தாயகங்களுக்கு திரும்பிச் செல்லும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் கண்மாய்கள் வறண்டு காணப்படுகின்றன, நீர்நிலைகளும் நிரம்பவில்லை. பல மரங்கள் பட்டுப்போனதால் வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகள், கூடு கட்டி, அதில் தங்கி, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பறவைகள் ஆர்வலர் முகவை முனிஸ் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்களை ஒட்டிய பகுதிகளில் மரங்கள் அதிகமாக வெட்டப் பட்டுள்ளன. சரணாலயங்களில் உள்ள கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை பராமாிக்கவும், மழை நீரை சேமிக்கவும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சரணாலயங்களில் உள்ள நீர்நிலைகளில் உணவுக்காக வளர்க்கப்படும் மீன்குஞ்சுகளை சரியான தருணத்தில் விட வேண்டும். மன்னார் வளைகுடா தீவுகள் மற்றும் தனுஷ்கோடிக்கு பிளமிங்கோ பறவைகள் நூற்றாண்டு காலமாக தவறாமல் வந்து கொண்டு இருக்கின்றன. எனவே தனுஷ்கோடியில் பறவைகள் சரணாலயம் அமைத்து சுற்றுலா பயணிகள் பறவைகளை பார்வையிட முறையான வசதி களை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x